புனே ரியல் எஸ்டேட் அதிபர் 25 வயது கேத்தன் அகர்வால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. உயிரிழப்பு நிகழ்வுக்கு 34 நிமிடங்களுக்கு முன்பு, முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்ட 19 வயது சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுதரியுடன் ரகசிய செல்போன் உரையாடல் நடத்தியதாக சிடிஆர் (கால் டீடைல் ரெக்கார்டு) ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த உரையாடல் சதி திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் வாக்காக காவல்துறையால் கருதப்படுகிறது.

சியா கோயல் தனது துல்லியமான இருப்பிடமான லோகட் கோட்டையில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை சேத்தன் சவுதரிக்கு தெரிவித்ததாகவும், அந்தப் பகுதியில் வேறு சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ரகசிய அழைப்பு மூலம் இருவரும் திட்டத்தை இறுதி செய்ததாக விசாரணை அதிகாரிகள் பார்க்கின்றனர்.
ஒரு கோடி ரூபாய் பணம் தொடர்பான தகவல்
விசாரணையில் மற்றொரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. கேத்தன் அகர்வாலிடமிருந்தே ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கி, அதை சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுதரியிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் சதி திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன்பே உரையாடல்கள் நீக்கம்
சதி திட்டம் காவல்துறைக்கு தெரிய வராமல் இருக்க, இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்பே தங்கள் செல்போன் உரையாடல்கள், குரல் பதிவுகள், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செய்திகளை உடனடியாக நீக்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆரம்பகட்ட விசாரணையில் டிஜிட்டல் சான்றுகள் கிடைப்பது கடினமாக இருந்தது.
கூகுள் தேடல்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்கள்
செல்போன் தடயவியல் ஆய்வில், காவல்துறையின் சந்தேகத்தைத் தவிர்ப்பதற்கான வழிகள் மற்றும் கேத்தன் அகர்வாலுக்கு எப்படி எல்லாம் தீங்கு விளைவிக்கலாம் என்பது குறித்து இருவரும் கூகுளில் தேடியிருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது புனே ஊரக காவல் துறையின் இணைய குற்றப் பிரிவு, டிஜிட்டல் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் நீக்கப்பட்ட வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உரையாடல்களை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஜூன் 28 அன்று காட்சி மறு உருவாக்கம்
ஜூன் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, போலீஸார் சியா கோயலை லோகட் கோட்டைக்கு அழைத்துச் சென்று சம்பவத்தை மீண்டும் நடித்துக் காட்டச் செய்தனர்.
இதன்போது பல முக்கிய விவரங்கள் கண்டறியப்பட்டன. சேத்தன் சவுதரி புனேவிலிருந்து லோகட் கோட்டைக்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரம் பயணிக்க இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியதாகவும், சுங்கச் சாவடி சிசிடிவி கேமராக்களில் கார் பதிவாகாமல் இருக்க இந்த வாகனத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். அந்த இருசக்கர வாகனம் தற்போது போலீஸ் பரிமுதலில் உள்ளது.
திருமண ஏற்பாடு மற்றும் காரணங்கள்
நவம்பர் மாதம் கேத்தன் அகர்வாலுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுதரியுடன் இணைந்து திட்டங்களை வகுத்தார்.
சியா கோயல், தனக்கு நிச்சயிக்கப்பட்ட கேத்தன் அகர்வால் தலைமுடி பிக் பயன்படுத்தியதாலும், பேச்சு தடுமாற்றப் பிரச்சனை இருந்ததாலும் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருவரும் கிரைம் திரில்லர் வெப் சீரீஸ்களை மிஞ்சும் அளவுக்கு விரிவான திட்டங்களை தீட்டியதாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போதைய நிலை
ஜூன் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட சியா கோயல் மற்றும் சேத்தன் சவுதரி ஆகியோர் ஜூலை 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். லோகட் கோட்டையின் 3389 அடி உயரமுள்ள மலையில் இருந்து 400 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கேத்தன் அகர்வால் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் விவாதம்
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதம் நடைபெற்று வருகிறது. பலர், “திருமணத்திற்கு முன்பே பெற்றோரிடம் உண்மையைத் தைரியமாகச் சொல்லி திருமணத்தைத் தடுத்திருக்கலாம். பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், சட்டப்படி திருமணம் செய்துகொண்டிருக்கலாம். முடிவெடுப்பதில் ஏற்பட்ட மன தடுமாற்றமே இந்த விளைவை ஏற்படுத்தியது” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
விசாரணை மேலும் விரிவடைந்து வரும் நிலையில், கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : In the ongoing investigation into the Pune real estate businessman Ketan Agarwal incident at Lohagad Fort, call records revealed that Shia Goel had a secret phone conversation with her partner Chetan Chaudhary just 34 minutes before the event. This is viewed as final confirmation for their plan. They allegedly received one crore rupees from Ketan. Both are in police custody until July 3 while digital evidence recovery and scene reconstruction continue.இதையும் படிங்க :
இதையும் படிங்க :