திரிஷா ஜாதகத்தில் நான் கணித்த எல்லாமே 100% நடந்தது.. அடுத்து இது தான்.. பிரபல இயக்குனர் கணிப்பு!

சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் இயக்குனர் பிரவீன் காந்தி, நடிகை திரிஷாவின் சினிமா அறிமுகம் முதல் அவரது ஜோதிட கணிப்பு வரை பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, திரிஷா ஒருநாள் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு யோகம் கொண்டவர் என்று 1999-லேயே தான் சொல்லியிருப்பதாக அவர் குறிப்பிட்டது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1999-இல் வெளியான ‘ஜோடி’ படத்தை இயக்கியபோது, நாயகியுடன் இருக்கும் காட்சிகளுக்கு அழகான மாணவிகள் தேவைப்பட்டதாக பிரவீன் காந்தி நினைவுகூர்ந்தார். அப்போது சர்ச் பார்க் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த திரிஷா, கோடை விடுமுறையில் சூட்டிங்கிற்கு வந்தார். தாரா உமேஷ் மூலம் அவர் அறிமுகமானார்.

அவரைப் பார்த்ததும் ஒரு பெரிய கதாபாத்திரமே கொடுக்கலாம் என்று நினைத்ததாக பிரவீன் காந்தி கூறினார். ஆனால் அப்போது திரிஷாவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் பெரிதாக இல்லை.

“சினிமா நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ளத்தான் வந்தேன்” என்று அவர் சொன்னதாகவும், அவரது அம்மாவுக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருந்ததாகவும் பிரவீன் காந்தி தெரிவித்தார். அனுபவத்திற்காக வந்த அந்த வருகைதான் அவரது வாழ்க்கையை மாற்றிவிட்டது என இயக்குனர் நினைவு கூர்ந்தார்.

‘ஜோடி’ படப்பிடிப்பு முடிந்த பிறகு, இயக்குனர் பிரியதர்ஷனிடம் திரிஷாவைப் பற்றி தான் சொன்னதாகவும், அதற்குப் பிறகு சிறு சிறு வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியதாகவும் பிரவீன் காந்தி குறிப்பிட்டார்.

பின்னர் திரிஷா மாடலிங் துறைக்குச் சென்று மிஸ் சென்னை பட்டம் வென்றார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதற்குப் பிறகு சினிமாவில் முன்னணி இடத்திற்கு உயர்ந்தார் என அவர் பெருமையுடன் பேசினார்.

அதே சமயத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். திரிஷா ‘ஜோடி’ படத்திற்கு சூட்டிங் வந்தபோது, அவருடைய ஜாதகத்தை பிரவீன் காந்தி பார்த்திருக்கிறார். அப்போது அவருக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருந்ததால், திரிஷாவின் ஜாதகத்தை வாங்கி கணித்ததாகக் கூறினார்.

அதன்பிறகு திரிஷாவின் அம்மாவிடம், “இப்போதைக்கு உங்க பொண்ணு சினிமாவில் ஆர்வம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். நீண்ட காலம் முன்னணி நடிகையாக இருப்பார்” என்று சொன்னதாகவும், அது அப்படியே நடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல, “இவர் ஒருநாள் முதலமைச்சர் ஆகும் அளவுக்கு யோகம் கொண்டவர்” என்று அப்போதே தான் சொல்லியிருப்பதாகவும் பிரவீன் காந்தி கூறினார். “இப்போது நான் சொன்னபடி அவர் பல வருடங்களாக முன்னணி நடிகையாகவே இருக்கிறார். அதேபோல முதலமைச்சர் ஆவாரா? என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்” என சிரித்தபடியே அவர் பேசியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக திரிஷாவின் பெயர் அரசியல் விவாதங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், இந்தப் பேட்டி கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே மதுரையில் திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அரசியல் மேடைகளிலும் அவரது பெயரைச் சுற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில் திரிஷா முதலமைச்சர் ஆகும் யோகம் கொண்டவர் என்ற பிரவீன் காந்தியின் கருத்து, தற்போதைய முதலமைச்சர் விஜயின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் இது தொடர்பான கருத்துக்கள் தீவிரமாக பரிமாறப்பட்டு வருகின்றன.

Summary in English : Director Praveen Gandhi, in a recent interview, recalled introducing Trisha in the 1999 film Jodi when she was a Class 10 student. He predicted from her horoscope that she would become a long-lasting leading actress and even possess the potential to become Chief Minister one day. The remarks have sparked fresh political buzz amid ongoing discussions about Trisha entering politics.

------Advertisement------
------Advertisement------