கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் அன்னை வேளாங்கனி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் 53 வயது ரெக்ஷன் மனோஜ் ஜோஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து அம்மாண்டிவிடை பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி பகுதி நேர வேலைக்கு சேர்ந்தார்.

விளம்பரத்தில் கடையில் பணிபுரிவதுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் போட ஆர்வமுள்ளவர்களுக்கு மாதம் 20,000 ரூபாய் சம்பளம், காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை பணி நேரம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
செப்டம்பர் 2ஆம் தேதி வழக்கம் போல் கடைக்குச் சென்ற மாணவியை, கடை உரிமையாளர் தனது கண்ணுக்கு சொட்டு மருந்து விட உதவச் சொல்லி அழைத்ததாகக் கூறப்படுகிறது. ரெண்டு சொட்டு தான், உடனே விட்டுட்டு வந்துடுமா என கூறினார்.
மாணவி அறைக்குச் சென்றபோது, கடையின் உள்பகுதியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று கதவை மூடிவிட்டு, தாய்லாந்து நாட்டு மசாஜ் வீடியோக்களை செல்போனில் காட்டி அதேபோல் செய்யுமாறு வற்புறுத்தியதாகப் புகார்.
மாணவி மறுத்த நிலையில், அச்சத்துடன் சப்தம் எழுப்பி அங்கிருந்து தப்பித்து வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் நோக்கில் தாக்குதல், தொல்லை அளித்தல், பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரெக்ஷன் மனோஜ் ஜோஸைக் கைது செய்தனர். அவர் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், கடைக்கு வரும் பெண் ஊழியர்களை தனி அறைக்கு அழைத்து வீடியோக்கள் காட்டி வற்புறுத்தியதாகவும், இணங்கும் பெண்களுக்கு கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நான்கு பெண் ஊழியர்களும் விசாரணையில் இதேபோன்ற அனுபவங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Summary in English : A college student in Kanyakumari joined a furniture shop after seeing Instagram posts offering twenty thousand rupees salary plus video work. The owner later called her to a private room, showed massage videos and insisted she do the same. She left, told her family and approached police. He was arrested. Other women staff later described similar experiences. Inquiry continues.