ஈரோடு மாவட்டம், புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மீது அவரது தாய்வழி பாட்டி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுவனின் பெற்றோர் சமையல் ஆர்டர் வேலை செய்து வருகின்றனர். திருமணம் மற்றும் விழாக்காலங்களில் வேலை அதிகமாக இருக்கும் என்பதால், சிறுவனை லக்காபுரத்தில் உள்ள தாய்வழி பாட்டி வீட்டில் விட்டுச் செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி சிறுவன் பாட்டி வீட்டிற்குச் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் வற்புறுத்திய போதும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து பதட்டமாக இருந்தார். இதைக் கவனித்த தாய், ஏன் பாட்டி வீட்டிற்குச் செல்ல மறுக்கிறாய், ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறாய் என கேட்டார்.
அப்போது சிறுவன் அழுதுகொண்டே, ஆறாம் வகுப்பு படித்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதைக் கேட்ட சிறுவனின் தாய் ஆத்திரமடைந்து, நேரடியாக பாட்டியின் வீட்டிற்குச் சென்று சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
12 வயது பேரனுக்கு சொந்த பாட்டியே பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்துள்ள புகார் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : A 12-year-old boy from Erode’s New Agraharam often stayed with his maternal grandmother in Lakkapuram while his parents handled catering work. On September 12 he refused to go and looked tense. He later told his mother she had troubled him for two years. The mother filed a complaint. Police registered a case and arrested the grandmother. Probe continues.