சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் கிராமத்தில் விவசாய கிணற்றில் ஏழு மாத கர்ப்பிணி இளம்பெண் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமம் கருங்குள்ளன் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டரின் மகள் கோகிலா (23). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தவர்.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் அருகில் உள்ள சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், கோகிலா ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதுதொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கோகிலாவிடம் விசாரித்தபோது, தனது கர்ப்பத்திற்கு பக்கத்து ஊரான கன்னியாம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அம்மாசிதான் காரணம் எனத் தெரிவித்தார்.
அம்மாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். கோகிலா தனது காதலனோடு செல்ல சம்மதம் தெரிவித்த நிலையில், போலீசார் இருவரையும் சமரசம் பேசி ஆகஸ்ட் 26ஆம் தேதி அனுப்பி வைத்தனர். அன்றே அம்மாசி கோகிலாவின் கழுத்தில் தாளி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
ஆனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி அம்மாசி கோகிலாவின் தந்தை வீட்டுக்குச் சென்று, கோகிலாவை காணவில்லை எனத் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். போலீசார் தேடுதல் பணியைத் தொடங்கினர்.
இந்த நிலையில் வெள்ளாளபுரம் கிராமம் தானக்குட்டி வளவைச் சேர்ந்த கோவிந்தம்மாளுக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதந்துகொண்டிருந்தது. உடனே கொங்கணாபுரம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி தீயணைப்பு வீரர்களின் உதவியோடு மூட்டை வெளியே எடுக்கப்பட்டது. உள்ளே பெண் உடல் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
குடும்பத்தினர் அழைக்கப்பட்டு அடையாளம் காட்டியபோது, கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது கோகிலாதான் என்பது உறுதி செய்யப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காணாமல் போன வழக்கு மர்ம உயிரிழப்பாக மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. திருமணம் செய்த பின்னர் கர்ப்பத்திற்குத் தான் காரணமா என்ற சந்தேகம் அம்மாசிக்கு எழுந்ததாகவும், இதுகுறித்து கோகிலாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதையடுத்து நடந்த சம்பவத்தில் கோகிலா உயிரிழந்தார்.
பின்னர் இரவோடு இரவாக சாக்கு மூட்டையில் உடலை வைத்து கிணற்றுக்குள் விட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் தனது மனைவி காணாமல் போனதாக அம்மாசி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அம்மாசியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் நான்கு ரோடு அருகே அரிசிப்பாளையம் பகுதியில் அண்மையில் நடந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, இந்த சம்பவமும் மாவட்ட மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சில நாட்களிலேயே நிறைமாத கர்ப்பிணி பெண் இவ்வாறு உயிரிழந்திருப்பது பலரையும் உலுக்கியுள்ளது. சேலத்தில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தைக் கிளப்பியுள்ளது.
போலீசார் மேலும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம்பெண்களின் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் தீவிர விவாதம் எழுந்துள்ளது.
English Summary : In Edappadi near Salem, 23-year-old Kokila, seven months pregnant, was recovered from a farm well inside a sack. After a clinic confirmed her condition, police allowed her to go with Ammasi. He later said she was missing. Family identified her. Police detained him for inquiry. Recent Salem incidents have worried residents.