வெளிநாட்டில் இருந்து வரும் போது எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்..? - பலரையும் மண்டை குழம்ப செய்யும் கேள்விக்கு பதில் இதோ..!


ஆசன வாயில் தங்க கட்டிகளை கடத்தி வந்த நபர் கைது. பிஸ்கட் பாக்கெட்டுக்குள் தங்க நகை கடத்தி வந்த நபர் கைது. அதில் வைத்து தங்கம் கடத்திய நபர் கைது. இதில் வைத்து தங்கம் கடத்தி வந்த நபர் கைது. இப்படியான செய்திகள் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை நம்முடைய செவிகளை தாக்கும்.

இதனை கேட்கும் போது, தங்கத்தை காசு கொடுத்து தானே வாங்கிட்டு வராங்க.. திருடிக்கிட்டு வந்த மாதிரி எதுக்கு கைது பண்றாங்க..? தங்கம் கொண்டு வந்தால் என்ன தப்பு..? தங்கம் என்ன போதை பொருளா..? என்றார் கேள்வியும் எவ்வளவு தங்கம் தான் வெளிநாட்டில் இருந்து எடுத்து வருவதற்கு அனுமதி உள்ளது என்ற கேள்வியும் நம்மில் பலருக்கு எழும்.

அப்படியான செய்திகள் வரும் போது தான், அக்கா பையனோ.. இல்லை, பக்கத்துக்கு வீட்டு பையனோ.. எதுக்கு அங்கிள் அவங்கள கைது பண்றாங்க. எவ்ளோ தங்கம் வெளிநாட்டில் இருந்து வரணும்.. என்று நம்முடைய பொது அறிவை கிண்டி கிளறுவான்.

நாமும் அது வந்து தம்பி வரிகட்டனும் டா.. வரி கட்டாம தப்பிக்க மறச்சு எடுத்து வந்தா கைது பண்ணுவாங்க என்று, அதையும் இதையும் உருட்டி விடுவோம். அந்த பையன் அடுத்த கேள்வி கேப்பான், எவ்ளோ தங்கம் எடுத்துட்டு வர அலோவ் பண்ணுவாங்கன்னு.. அப்படியான சிறு வண்டுகளிடம் சிக்கி சின்னா பின்னமான மனமில்லாமல் அலைபேசியில் யாருக்கோ போன் செய்வது போல எஸ்கேப் ஆன நாட்கள் பல.

சரி எவ்ளோ தான் தங்கம் கொண்டு வரலாம்..? எவ்வளவு வரி..? எப்படியெல்லாம் தங்கத்தை கொண்டு வரவேண்டும்.? எப்படியெல்லாம் கொண்டு வர கூடாது..? என்பதை தெளிவாக சொல்லும் பதிவு இது.


சரி வாங்க மேட்டருக்குள்ள போவோம்..!

எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்..?


நீங்கள் ஆணாக இருந்தால் 50,000 மதிப்பிலான தங்கம். பெண்ணாக இருந்தால் 1,00,000 மதிப்பிலான தங்கம். இந்தமதிப்பிற்கு ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் வித்தியாசம் வந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அதிக தொகை வித்தியாசம் வந்தால் எவ்வளவு வரி என்ற ஒரு ரசீது உங்கள் கையில் திணிக்கப்படும். பிறகு, அந்த தொகையை நீங்கள் சுங்கதுரையின் கேஷ் கவுண்டரில் திணிக்க வேண்டும்.

என்ன விதிமுறை..?


மேலே பார்த்த 50,000 மதிப்புள்ள நகை. 1,00,000 மதிப்புள்ள நகை எல்லாம் அடிக்கடி சென்று கொண்டு வரமுடியாது. அதற்கு கேட் போடும் விதமாக ஒரு உன்னதமான திட்டத்தை அரசு வைத்துள்ளது. ஆம், குறைந்த பட்சம் ஆறு மாதம் அல்லது அதற்கு மேல் நீங்கள் அந்த நாட்டில் தங்கியிருக்க வேண்டும். ஆறு மாதம் ஆகாமல் 5 மாதம் 29 நாள் என்று வந்தால் கூட இந்த 50,000 வரை, 1,00,000 வரை என்ற சலுகை எல்லாம் கிடையாது. ஒரு கிராம் தங்கம் வைத்திருந்தாலும் வரியை கட்ட வேண்டியது தான்.

எவ்வளவு வரி..?

வெளிநாட்டில் நீங்கள் ஆறு மாதத்திற்கு மேல் தங்கியிருந்து திரும்பி வந்தால் ஆணாக இருந்தால் 50 ஆயிரம் அல்லது பெண்ணாக இருந்தா 1 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்கு வரி செலுத்த தேவையில்லை. அந்த மதிப்பிற்கு மேல் நீங்கள் வைத்திருக்கும் நகைக்கு 12.5% இறக்குமதி வரி (Import Tax) மற்றும் 3% சரக்கு மற்றும் சேவை வரி ( Goods and Service Tax) கட்ட வேண்டும்.

உதாரணதிற்கு, நீங்கள் ஒரு ஆண். ஆறு மாதத்திற்கு மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்து விட்டு 70,000 மதிப்புள்ள நகையுடன் இந்தியா திரும்புகிறீர்கள். 50,000 ரூபாய்க்கு வரி விலக்கு. மீதம், 20,000 ரூபாய்க்கு 12.5 + 3.00 என மொத்தம் 15.50% வரி செலுத்த வேண்டும். அதாவது, 3,100 ரூபாய் வரிசெலுத்த வேண்டும்.

ஒரு வேளை, வெளிநாட்டில் இருந்து ஆறு மதத்திற்குள் திரும்பினால் வரிவிலக்கு கிடையாது.  மொத்த தொகைக்கும் 36% இறக்குமதி வரி மற்றும் 3% G.S.T வரி கட்ட வேண்டும். அதாவது, 70,000 ரூபாய்க்கும் 36.00 + 3.00 என மொத்தம் 39% வரி கட்ட வேண்டும். அதாவது, 27,300 ரூபாய் வரியை கட்டிவிட்டு காலரை தூக்கி விட்டுக்கொண்டு பகுமானமாக வந்துவிடலாம். இல்லையென்றால், அவமானம் ஆகிவிடும்.

எப்படி கொண்டு வர வேண்டும்.?


தங்கம் கட்டாயமாக ஆபரணமாக இருக்க வேண்டும். கட்டியாகவோ, தங்க பிஸ்கட்டாகவோ, தங்க நாணயமாகவோ அல்லது தங்க பஸ்பமாகவோ இருந்தால் வரிவிலக்கு கிடையாது. 50,000 மதிப்புள்ள தங்கம் தான் என்றாலும் 15.5% வரியை செலுத்த வேண்டி வரும்.

வரி கட்ட நான் தயார்..!


நான் வரி கட்ட ரெடி.. எவ்ளோ வேணும்னாலும் தங்கம் கொண்டு வரலாமா..? என்றால் அதற்கு பதில் முடியாது என்பது தான். ஒருவர், அதிக பட்சம் 1 கிலோ தங்கம் கொண்டு வரலாம். அதற்கு மேலே சொன்னது போல 39% வரியை கட்டிவிட்டு உங்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம். அதற்கு அதிகமாக கொண்டு வர வேண்டும் என்றால் இறக்குமதி படிவம், உங்கள் தொழில் மற்றும் வருமான மூலதனம் என ஆயிரத்தெட்டு விஷயங்களை கடந்து வர வேண்டும்.வெளிநாட்டில் இருந்து வரும் போது எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்..? - பலரையும் மண்டை குழம்ப செய்யும் கேள்விக்கு பதில் இதோ..! வெளிநாட்டில் இருந்து வரும் போது எவ்வளவு தங்கம் எடுத்து வரலாம்..? - பலரையும் மண்டை குழம்ப செய்யும் கேள்விக்கு பதில் இதோ..! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.