அவசரகால பயணங்களுக்கு கால் டாக்ஸிகளில் ரூ.1500 செலவு தவிர்க்கும் நோக்கத்தில், பைக் டாக்ஸி சேவையை ராபிடோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இது நாடு முழுவதும் பிரபலமடைந்தாலும், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால், பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக அரசு முதல் நடவடிக்கையாக இந்த சேவையை ரத்து செய்வதாக அறிவித்து, 2025 ஜூன் 16 முதல் பைக் டாக்ஸிகள் இயங்க தடை விதித்தது.
இதை எதிர்த்து ராபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தும், உயர் நீதிமன்றம் தடையை உறுதி செய்ததால், பலர் சேவை நிறுத்தப்படும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், ராபிடோ புதுமையாக பைக் பார்சல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பயணிகள் மனிதர்களாகக் கருதப்படாமல், பார்சல்களாக பதிவு செய்யப்படுகின்றனர்.
புறப்பாடு மற்றும் இறக்குமிடத்தை குறிப்பிட்டு, பைக் மூலம் பொருட்களை ஏற்றி செல்வதே இதன் நோக்கம். இந்த நடைமுறை சட்டரீதியாக தடையை தவிர்க்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
ஆனால், இது ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இது குறித்து விவாதங்கள் தொடங்கியுள்ளன, சிலர் இதை சட்ட விலக்கு முயற்சியாகவும், சிலர் புதுமையாகவும் பார்க்கின்றனர்.