நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ஆர்யா, ‘அட்டகத்தி’ தினேஷ், அசோக் செல்வன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நீலம் புரொடக்சன் தயாரிப்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தின் வெண்மணி, வேளாங்கண்ணி, வேதாரண்யம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், விழுந்தமாவடி கிராமத்தில் கடந்த ஜூலை 10 முதல் நடைபெற்று வந்த படப்பிடிப்பில், கார் சேஸிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜின் மகனான மோகன்ராஜ், ஸ்டண்ட் யூனியனின் முக்கிய நிர்வாகியாகவும், திறமையான சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார்.
படப்பிடிப்பின்போது, கார் பறக்கும் ஸ்டண்ட் காட்சியில் மோகன்ராஜ் காரை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து தலைகீழாக புரண்டது. இதில் அவர் தவறி விழுந்து, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக ஆரம்பத்தில் படக்குழு தெரிவித்தது.
ஆனால், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்கள், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இந்த ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டதாகவும், இதுவே மோகன்ராஜின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்தவுடன், படக்குழுவினர் மோகன்ராஜை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, மோகன்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், படக்குழுவின் அஜாக்கிரதையே இந்த உயிரிழப்புக்கு காரணம் என இணையத்தில் கோரிக்கைகள் எழுந்தன.
முறையான மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், இதற்கு படக்குழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கீழையூர் காவல் நிலையத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட படக்குழுவில் பணியாற்றிய நான்கு பேர் மீது அலட்சியமாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மோகன்ராஜின் மரணம் தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு ‘விடுதலை’ மற்றும் ‘சர்தார் 2’ படப்பிடிப்புகளிலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்ததால், படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.
இந்த சம்பவம் திரைப்படத் துறையில் பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது திரையுலகினரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

