கரூர், நவம்பர் 25, 2025 : கரூர் மாவட்டத்தில் போலீஸ் காவலராக பணியாற்றியவர், பாலியல் அத்துமீறல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, கோவில் வாசலில் பிச்சை எடுத்து கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் மற்றும் போலீஸ் துறையின் நடவடிக்கைகள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டம், சனப்பிரட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சின்னாண்டாம் கோவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் நட்பாகப் பழகி வந்தார்.

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு, இருவரும் சனப்பிரட்டி அருகிலுள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கரூர் பசுபதிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிய வெங்கமேட்டைச் சேர்ந்த 35 வயது பிரபாகரன், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பிரபாகரன், தனது நண்பரும் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தவருமான கௌதமனை பைக்கில் பின்னால் அமர வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் தொழில்பேட்டை பகுதியில் செல்லும் போது, இளம்பெண்ணும் இளைஞரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
உடனடியாக பைக்கை நிறுத்தி, "இந்த நேரத்தில் இங்கு தனிமையில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" எனக் கேட்டார். தன்னை போலீஸ் காவலர் என அறிமுகப்படுத்திய பிரபாகரன், இளைஞரை அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், இளைஞரிடமிருந்து 8,000 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டார்.
பின்னர், தனிமையில் மாட்டிக் கொண்ட இளம்பெண்ணை பிரபாகரனும் கௌதமனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரிடமிருந்தும் தப்பித்த இளம்பெண், அரைகுறை ஆடையுடன் சாலையை நோக்கி ஓடி, புதர் பகுதியில் மறைந்தார். அவருடன் வந்த நண்பர் அவரை மீட்டு வீட்டில் விட்டுச் சென்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் கரூர் பசுபதிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரபாகரனின் அத்துமீறல் உறுதியானதால், அவரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைதாகி ஜாமினில் வெளியே வந்த பிரபாகரன், உயர் அதிகாரிகளைச் சந்தித்து தனது சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி முறையிட்டார். ஆனால், "இவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு, வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது ஜாமினில் இருப்பதே போதும்" எனக் கண்டித்து அனுப்பியுள்ளனர் உயர் அதிகாரிகள்.
இந்நிலையில், தன்னை நிரபராதியாகக் காட்டிக் கொள்ளவும், புகார் அளித்த இளம்பெண்ணை வாபஸ் பெறச் செய்யவும், சஸ்பெண்டை ரத்து செய்யவும் முடிவு செய்த பிரபாகரன், ஊடகங்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டு, வெண்ணைமலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வாசலில் தனது மகனுடன் அமர்ந்து பிச்சை எடுப்பது போல் நடித்துள்ளார்.
"சாப்பாட்டுக்கு வழி இல்லை, அதனால பிச்சை எடுக்கிறேன். இன்னைக்கு 30 ரூபா கிடைச்சா போதும், அரைப்படி அரிசி வாங்கி சாப்பிடுவேன்" என கதறி அழுது கொண்டிருக்கும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன. இந்த வீடியோக்களில், "நான் முன்னாடி போலீஸ் வேலை பார்த்தேன். என் மீது பொய் கேஸ் போட்டாங்க. ரெண்டரை மாசமா சஸ்பெண்ட்ல இருக்கேன்" எனக் கூறியுள்ளார்.
அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த சக போலீசார் அவருக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்ப முயன்ற போது, அவர்களின் காலில் விழுந்து கதறி நடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம், போலீஸ் துறையின் மகத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
"காவல்துறை பணி என்பது மக்களை காக்க வேண்டியது, அத்துமீறல் செய்ய அல்ல" என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் மன உளைச்சல் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் துறை இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறது.
Summary in English : A former Karur police constable, Prabakaran, suspended for attempted sexual assault on a 24-year-old woman during patrol, staged a begging act at a temple with his son to portray innocence and seek suspension revocation. Viral videos show him crying for food money, claiming false case. Police intervened, but incident sparked controversy over departmental integrity.

