திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிடாரங்கொண்டான் பகுதியில், தியாகராஜர் கோயில் வளாகத்தில் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி (Thiru Vi Ka Government Arts College) செயல்பட்டு வருகிறது.
கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கல்லூரியில், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கல்லூரியின் அறிவிப்பு பலகையில் "பொறுப்பான நல்ல குடிமக்களாக மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தல்", "அனைத்து துறைகளிலும் அறிவைப் பெற உயர்கல்வி புகட்டுதல்" போன்ற செயல்நோக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதையெல்லாம் மாணவிகள் வேறு விதமாகப் புரிந்து கொண்டனரோ என்னும்படியான சம்பவம் ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் துறையில் பயிலும் மாணவிகள், கல்லூரியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, வகுப்பறையிலேயே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் மது அருந்தியுள்ளனர். இந்தக் காட்சி ஒரு நிமிட அளவிலான வீடியோவாக பதிவாகியுள்ளது.
வீடியோவில், மாணவிகள் பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் குடிப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், "குடிச்சுட்டா ஆர மணி நேரம் மயக்கம் அடிச்சு விழுந்தா சாவடிச்சிருவா... பாத்துக்கோ" என்று எச்சரிக்கை செய்யும் வகையில் பேசிக்கொள்வதும் பதிவாகியுள்ளது. "ஒழுங்கா ஆட வேண்டும்" என்று கூறியபடியே அவர்கள் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பெற்றோர், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக நடராஜன், முதல்வராக சுஜாரிதா மேக்டலின் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து கல்லூரி முதல்வரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவ மாணவிகள் மது அருந்துவது, குடிப்பழக்கத்துக்கு ஆளாவது போன்றவை நண்பர்கள் மூலமாக மட்டுமல்ல, குடும்ப சூழலாலும் ஏற்படுகிறது என உளவியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வீட்டில் ஆண்கள் குடித்துவிட்டு வருவதை, சரக்கு பாட்டில்களை ஒளித்து வைத்து குடிப்பதை பார்த்து வளரும் குழந்தைகள் (ஆண், பெண் இருபாலரும்) இத்தகைய தவறான பழக்கங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உடனடியாக முறையான உளவியல் ஆலோசனை வழங்கி, நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கு முன்பு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் சீருடையுடன் மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி, ஆறு மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது. இப்போது மீண்டும் இதுபோன்ற சர்ச்சை எழுந்துள்ளது கல்வி நிறுவனங்களில் ஒழுங்கு மற்றும் மாணவர் நலன் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary in English : A video showing female students consuming alcohol in a classroom at Thiru Vi Ka Government Arts College, Tiruvarur, has circulated widely on social media. The students were reportedly rehearsing for a college event. The institution is now facing public attention over the incident.

