வாடகைக்கு வந்த நபருடன் காதல்! 4 ஆண்டு ரகசியம் அம்பலம்! குலை நடுங்க வைக்கும் பின்னணி!

லக்னோ (நிஷாத்கஞ்): உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் நிஷாத்கஞ் பகுதியில் அதிர்ச்சியூட்டும் கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

69 வயதான நிர்மலாதேவி என்பவரை அவரது சொந்த மருமகள் ரஞ்சனா வர்மா மற்றும் அவரது காதலன் ராஜன் சர்மா ஆகியோர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். 

கொள்ளைக்காக வந்தவர்கள் கொலை செய்துவிட்டுச் சென்றதாக நாடகமாட முயன்ற நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

நிர்மலாதேவி தனது மகன் திரிதேஷ் வர்மா, மருமகள் ரஞ்சனா வர்மா மற்றும் நான்கு பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மகன் திரிதேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மருமகள் ரஞ்சனா இல்லத்தரசியாக வீட்டைப் பார்த்து வந்தார்.

சம்பவம் எப்படி நடந்தது?

கடந்த சனிக்கிழமை, குடும்பத்தினர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் ரஞ்சனாவும் ஷாப்பிங் சென்றதாகக் கூறிவிட்டு வீட்டில் நிர்மலாதேவி மட்டும் தனியாக இருந்தார். 

மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 14 வயது பேரன் ஆதித்யா, வீட்டுக் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்றபோது, தனது பாட்டியின் உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அலறினார். உடனடியாக தந்தை திரிதேஷ் மற்றும் தாய் ரஞ்சனாவுக்கு தகவல் தெரிவித்ததுடன் போலீசாருக்கும் புகார் அளித்தார்.

வீடு முழுவதும் அலங்கோலமாகக் கலைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. நிர்மலாதேவி அணிந்திருந்த நகைகளும் காணாமல் போயிருந்தன. முதலில் இது கொள்ளைக்காரர்கள் நுழைந்து கொலை செய்த சம்பவம் என்று குடும்பத்தினர் நம்பினர்.

ஆனால் லக்னோ போலீசாருக்கு உடனடியாக சந்தேகம் எழுந்தது. வீட்டின் கதவுகள் உடைக்கப்படாமல் இயல்பாக இருந்ததால் இது திட்டமிட்ட கொலை என்று போலீசார் சந்தேகித்தனர். வீட்டில் இருந்த CCTV கேமராக்கள் சரியாக மதியம் 2 மணி முதல் 4 மணி வரை செயல்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ தொழில்நுட்பம் தெரிந்தவர் கேமராவை மொபைல் மூலம் ஆஃப் செய்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், அருகிலுள்ள வேறு CCTV காட்சிகளில் மாலை 4 மணியளவில் ரஞ்சனா ஒரு இளைஞருடன் காரில் செல்வது பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருந்த 21 வயதான ராஜன் சர்மா என்பது தெரியவந்தது.

மோப்பநாய் சாட்சி!

சம்பவ இடத்துக்கு வந்த மோப்பநாய், நிர்மலாதேவியின் உடலிலிருந்து வாசனையைப் பிடித்து நேராக மேல் தளத்தில் ராஜன் சர்மாவின் அறைக்குச் சென்று நின்றது. இது போலீசாருக்கு வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ரஞ்சனா மற்றும் ராஜன் சர்மா இருவரையும் தனித்தனியே விசாரித்தபோது, ஆரம்பத்தில் மறுத்தாலும் CCTV ஆதாரங்களைக் காட்டியதும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.

காதல் - எச்சரிக்கை - கொலை திட்டம்

விசாரணையில் தெரியவந்த விவரங்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன. நிர்மலாதேவியின் வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருந்த ராஜன் சர்மாவுக்கும் ரஞ்சனா வர்மாவுக்கும் இடையே நான்கு ஆண்டுகளாக ரகசிய காதல் இருந்து வந்துள்ளது. திரிதேஷ் வேலைக்குச் சென்ற நேரங்களில் ராஜன் கீழ் தளத்துக்கு வந்து ரஞ்சனாவுடன் நேரத்தைச் செலவழித்து வந்தார்.

இந்த விவகாரம் நிர்மலாதேவிக்கு தெரியவந்ததும் அவர் கடும் ஆத்திரம் அடைந்தார். தனது மகனின் வாழ்க்கையை சீரழிக்கும் இந்த உறவை வன்மையாகக் கண்டித்த அவர், ரஞ்சனாவிடம் “இனிமேல் ராஜன் வீட்டுக்குள் வரக்கூடாது. மீறினால் மகனிடம் உண்மையைச் சொல்லிவிடுவேன்” என்று எச்சரித்திருந்தார்.

சம்பவத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சனாவும் ராஜனும் சேர்ந்து நிர்மலாதேவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

திட்டமிட்ட கொலை

சனிக்கிழமை தங்களுக்கு சாதகமான நாள் என்று குறித்த இருவரும், ரஞ்சனா தனது மொபைல் மூலம் வீட்டு CCTV கேமராவை மதியம் 2 மணிக்கு ஆஃப் செய்தார். பின்னர் ராஜனை அழைத்து இருவரும் சேர்ந்து நிர்மலாதேவியின் கை கால்களை கட்டி, சேலையால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தனர்.

பின்னர் கொள்ளை நடந்ததைப் போல் தோற்றமளிக்க, நிர்மலாதேவியின் நகைகளை கழற்றிக் கொண்டு, பீரோவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சிதறடித்தனர். 

அதன் பிறகு மாலை 4 மணியளவில் இருவரும் காரில் வெளியே சென்றனர். பின்னர் ரஞ்சனா மொபைல் மூலம் CCTV-யை மீண்டும் ஆன் செய்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளையும் மீட்டுள்ளனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Summary in English : In Lucknow's Nishatganj area, 69-year-old Nirmala Devi was found dead at her home with hands and legs tied. Police investigation revealed involvement of her daughter-in-law Ranjana Verma and tenant Rajan Sharma. CCTV footage, sniffer dog and other evidence led to their arrest. Jewellery was recovered.]