வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலுமங்காபுரம் அருகே சம்பங்கிநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 30க்கு மேல்) என்பவரை அவரது மனைவி ஜெயந்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபுவின் தாயார் லோகநாயகி அவரை சிறு வயதிலிருந்தே செல்லமாக வளர்த்து வந்தார். பிரபுவுக்கு அண்ணன் சிறு வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், தாய், தங்கை, சித்தி உறவினர்கள் அனைவரும் அவரை அன்போடு பார்த்து வந்தனர்.
லோகநாயகியின் தங்கையின் கணவர் இறந்தபோது 5 மாத குழந்தையாக இருந்த சரவணனையும் லோகநாயகியும் அவரது தங்கையும் தங்கள் குழந்தையாகவே வளர்த்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபுவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த லோகநாயகி, உறவுக்காரப் பெண் ஒருவரை அவருக்கு மணமுடித்து வைத்தார்.

ஆனால் பிரபுவுக்கும் அதே பகுதியில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயந்திக்கும் திருமணத்துக்கு முன்பே தொடர்பு இருந்தது. திருமணத்துக்குப் பிறகு இதை அறிந்த பிரபுவின் முதல் மனைவி அவரைப் பிரிந்து சென்றார். அதன்பிறகு பிரபு ஜெயந்தியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.
திருமணமான பிறகு பிரபு குடிப்பழக்கத்துக்கு ஆளானார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த ஜெயந்தி ஒரு நாள் குடிபோதையில் இருந்த பிரபுவின் மார்பின் மீது ஏறி அமர்ந்து கழுத்தை பிடித்து நெரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த தாய் லோகநாயகி, “உனக்கு எதற்காக இந்த வாழ்க்கை? உன் உயிரை இவள் கையில் முடித்துக் கொள்வதற்காகத்தான் இவ்வளவு நாள் உன்னை வளர்த்தோமா?” என்று கண்ணீர் விட்டு அழுதார்.
அதைப் பார்த்த பிரபு, தாயை சமாதானப்படுத்த “அம்மா, நாங்க விளையாடிகிட்டு இருக்கோம்மா.. இது விளையாட்டுக்காகத்தான்” என்று கூறியுள்ளார். இது என்ன விசித்திர விளையாட்டு என்று தாய் கண்டித்து அழுதுள்ளார்.
இந்த நிலையில், தொடர்ந்து ஏற்பட்ட சண்டைகளால் ஜெயந்தி வேறு ஒருவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதி பிரபு மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் பிரபுவுக்கு வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்ததாக ஜெயந்தி கூறியுள்ளார். பிரபுவுக்கு அவ்வப்போது வலிப்பு வரும் வழக்கம் இருந்ததால், லோகநாயகியும் உறவினர்களும் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியபோதும் அதே தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜெயந்தி மருத்துவர்களிடம் “வலிப்பு நோய் வந்து இறந்துவிட்டார்”, “தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார்” என முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்தார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜெயந்தியிடம் விசாரணை செய்தபோது, “கணவரை நான் தான் கழுத்தை நெரித்துக் கொன்றேன். இதற்கு பிரபுவின் தம்பி சரவணன் எனக்கு உதவி செய்தார்” என்று ஜெயந்தி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜெயந்தி மற்றும் சரவணன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் பிரபுவின் தாயார் லோகநாயகியும் உறவினர்களும் இதை மறுத்துள்ளனர். “சரவணன் அப்படிப்பட்ட ஆள் இல்லை. ஜெயந்தி எங்கள் குடும்பத்தை பழிவாங்க நினைத்து பொய் சொல்கிறார்.
அவருக்கு வேறு யாரோ உதவி இருக்கிறது. என் ஒரு மகனை கொன்றுவிட்டு, இன்னொரு மகன் மீது பழி போடுகிறார். போலீசார் உண்மையை கண்டுபிடித்து சரவணனை விடுவிக்க வேண்டும்” என்று லோகநாயகி கண்ணீருடன் கூறியுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் சத்துவாச்சாரி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Summary in English : In Vellore district, a man named Prabhu from Sambanginallur area near Alamellumangapuram passed away after a dispute with his wife Jayanthi. His mother Lokanayaki and family raised him and his brother Saravanan with care. Jayanthi and Saravanan were taken into custody by police for inquiry following the incident. Family members expressed doubts about the statements.

