திருவனந்தபுரம், மார்ச் 26, 2026: 2025 மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்ற ஒரு எளிய நாடோடி பெண்ணாக அறியப்பட்ட மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) இன்று இந்திய சமூக ஊடகங்களின் சென்சேஷனாக மாறியுள்ளார். அவரது இயல்பான அழகு, நம்பிக்கையான பேச்சு மற்றும் கண்கள் கவரும் சிரிப்பு ஆகியவை அவரை ஒரே இரவில் நாட்டின் பிரபலமாக்கின.
ஆனால் அந்த புகழுக்கு பின்னால் சினிமா வாய்ப்புகள், பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சை, குடும்ப எதிர்ப்பு, காதல் திருமணம் என பல்வேறு திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணம் அவருக்கு காத்திருந்தது.

தற்போது அவரது காதலன் ஃபர்மான் கானுடன் (Mohammad Farman Khan) திருமணம் செய்து கொண்ட நிலையில், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது புதிய குற்றச்சாட்டுகளை எழுப்பி அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்து பாரதி நாடோடி பழங்குடி இனத்தைச் சேர்ந்த மோனாலிசா, தனது குடும்பத்துடன் திருவிழாக்களில் பாசிமணி ருத்ராட்ச மாலைகளை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். 2025-ம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் அவர் மாலை விற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு யூடியூபர் அவரை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அந்த வீடியோவில் மோனாலிசாவின் எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, ஆடம்பரமில்லாத உடை, நம்பிக்கையுடன் பேசும் தன்மை, அழகான கண்கள் மற்றும் இயல்பான சிரிப்பு ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன.

சில மணி நேரங்களில் அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று YouTube, Instagram, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒரே நாளில் “கும்பமேளா மோனாலிசா” என்ற பெயரில் அவரது பெயர் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனது.
இந்த வைரல் புகழுக்கு பின்னர் சினிமா உலகம் அவரை நோக்கி திரும்பியது. ஹிந்தி திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அவரை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார்.
ஆனால் இந்த புகழின் நடுவில் பெரிய சர்ச்சை வெடித்தது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இன்ஸ்டா பிரபலப் பெண்ணை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டு, மிரட்டி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சனோஜ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அந்தப் பெண் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், படப்பிடிப்பு தளத்தில் உள்ளாடைக்குள் கைகளை வைத்து சீண்டியதாகவும், பலமுறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தி சனோஜ் மிஸ்ராவை கைது செய்தது. இதனால் மோனாலிசாவின் ஹீரோயின் வாய்ப்பு தள்ளிப் போனது.
இதற்கிடையில் மோனாலிசாவின் வாழ்க்கை வேறு திசையில் திரும்பியது. நடிகர் உத்கர் சிங் (Utkarsh Singh) உடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். அந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து மலையாள சினிமா உலகமும் அவருக்கு வாய்ப்பு அளித்தது. இயக்குநர் வினோ வர்கீஸ் (Binu Varghese) இயக்கும் ‘நாகம்மா’ என்ற படத்தில் நடிகர் கைலாஷுக்கு ஜோடியாக மோனாலிசா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இதே நேரத்தில் மோனாலிசாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த முகமது ஃபர்மான் கான் என்ற இளைஞரை அவர் காதலித்து வந்தார். சினிமா தொடர்பாக ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாறியது.
ஆனால், இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மோனாலிசாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். உறவுக்கார பையனுக்கு கட்டாய திருமணம் செய்ய முயன்றனர். மோனாலிசாவுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை.
குடும்பத்தினர் அவரை விடுவதாக இல்லை என்ற நிலையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து தனது காதலனை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் தம்பனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தார்.

காவல்துறையினர் அவரது பெற்றோரை அழைத்துப் பேசினர். மோனாலிசா திருமண வயதை எட்டியிருப்பதால் அவர் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் திருவனந்தபுரம் அருகே உள்ள அருமனார் ஸ்ரீ நைனார் தேவா கோவிலில் மோனாலிசா தனது காதலர் ஃபர்மான் கானை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு கேரளாவில் உள்ள பல அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் திருமணத்துக்குப் பின்னரும் அமைதி இல்லை. கொச்சியில் கணவருடன் செய்தியாளர்களை சந்தித்த மோனாலிசா, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தங்களை நிம்மதியாக வாழ விடாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். மைனர் காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் அத்துமீறியதாகவும் பகீர் கிளப்பினார்.
சனோஜ் மிஸ்ரா தனது திருமணத்தை பொதுவெளியில் விமர்சித்ததோடு, தந்தையை தவறாக வழிநடத்தி கடத்தல் புகார் அளிக்க வைத்ததாகவும், அநாகரிக மெசேஜ்கள் மற்றும் மிரட்டல் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஃபர்மான் கான் கூறினார்.
மோனாலிசா மைனர் காலத்தில் அத்துமீறல் நடந்ததாகக் கூறியதால், சனோஜ் மிஸ்ரா மீது POCSO பிரிவில் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கில் ஜாமினில் இருக்கும் சனோஜ் மிஸ்ராவுக்கு இது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் மோனாலிசாவின் தந்தை, மகள் கடத்தப்பட்டதாகவும் அவர் இன்னும் மைனர் என்றும் கூறி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். ஆனால் மோனாலிசா தனது பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து தான் மைனர் இல்லை என்று மறுத்தார்.

தந்தை சனோஜ் மிஸ்ராவின் பேச்சைக் கேட்டு செயல்படுவதாகவும், உண்மையை உணர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் உண்மை என்ன என்பது விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.
கும்பமேளா மோனாலிசாவின் வாழ்க்கை இப்போது புகழ், காதல், சர்ச்சை என முழு வட்டமாக மாறியுள்ளது. அவரது எளிமையான தொடக்கத்திலிருந்து இன்றைய நிலை வரை, சமூக ஊடக புகழின் இருண்ட பக்கங்களையும் அது வெளிப்படுத்துகிறது. மோனாலிசா தனது கனவுகளைத் தொடர்ந்து நிறைவேற்ற வாழ்த்துக்கள்!
Summary in English : Monalisa, a tribal woman from Madhya Pradesh, gained popularity after a video from Kumbh Mela went viral in 2025. She received film offers, acted in a music album and a Malayalam movie. She married her boyfriend Farman Khan in Thiruvananthapuram after seeking police help due to family opposition. Controversy arose involving a Hindi film director.

