TVK-வுக்கு ஓட்டு போட்டால் திமுக வெற்றி பெறும் என எப்படி கூறுகிறார்கள்? இதோ விளக்கம்!

சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக)க்கு வாக்களிப்பது திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து வாதிடுகின்றனர்.

இது வெறும் “பேப்பர் கணக்கு” மட்டுமே எனக் கூறப்படும் நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வாதத்தை அவர்கள் விளக்குகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தொகுதியை உதாரணமாகக் காட்டி அரசியல் பகுப்பாய்வாளர்கள் இந்த விளக்கத்தை முன்வைக்கின்றனர்.

2021 தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் 86,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 83,000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். வெற்றி வித்தியாசம் வெறும் 3,000 வாக்குகள் மட்டுமே.

இங்கு அதிமுக பெற்ற 86,000 வாக்குகளை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் என்று விமர்சகர்கள் சொல்கின்றனர்:

  1. அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகள்
  2. திமுகவுக்கு எதிரான வாக்குகள்

தவெக திமுகவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதால், திமுகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களின் ஒரு பகுதி வாக்குகளை தவெக பிரித்தெடுக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

உதாரணமாக, தவெக 5,000 வாக்குகளைப் பிரித்தால் அதிமுகவின் வாக்கு 81,000 ஆகக் குறையும். திமுக தனது 83,000 வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டால், திமுக வெற்றி பெற்றுவிடும் என்று வாதிக்கப்படுகிறது.

மேலும், தவெக அதிமுகவை எதிர்ப்பதாக எந்த நிலைப்பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை. “தேர்தல் இரண்டு கட்சிகளுக்கான போட்டி” என்று விஜய் கூறுவதால், அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் (திமுக ஆதரவு வாக்குகள்) தவெகக்கு செல்ல வாய்ப்பில்லை என்றும், அவை திமுகவுக்கே செல்லும் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் திமுகவின் ஆதரவு வாக்கு வங்கி பாதுகாப்பாக இருக்கும் என்பது அவர்களின் வாதம்.

எனவே, தவெக வருகையால் அதிகம் பாதிக்கப்படுவது அதிமுகவின் வாக்கு வங்கிதான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுகவுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கத்துடன் தான் விஜய் திமுகவை கடுமையாக விமர்சிப்பதாகவும் அவர்கள் பார்க்கின்றனர்.

இருப்பினும், இது வெறும் கணக்கு மட்டுமே என்பதை விமர்சகர்களே ஒப்புக்கொள்கின்றனர். “கள நிலவரம், மக்கள் மனநிலை, வாக்கு பரவல் ஆகியவை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு அமையும்” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே மதுராந்தகம் தொகுதியில் தவெக 80,000 வாக்குகளுக்கு மேல் பெற்றால், தவெகவே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அல்லது மூன்று கட்சிகளுக்கும் சம வாய்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க, அதிமுகவிற்கு கொங்கு மண்டலம் தான் பலம். ஆனால், பாமக இரண்டாக பிரிந்து கிடப்பதும், சசிகலா புதிய கட்சியை ஆரம்பித்து 21 தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவது என மேலும் அதிமுக வாக்கு வங்கி பிரிவடைய வாய்ப்பை உருவாக்குகின்றது. 

எனவே, இந்தத் தேர்தலை “வெற்றி தோல்வியை முன்கூட்டியே கணிக்க முடியாத தேர்தல்” என்று அரசியல் விமர்சகர்கள் வர்ணிக்கின்றனர். மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், வாக்காளர்களின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Summary in English : Political analysts argue that votes for Vijay's TVK party could split anti-DMK votes, mainly affecting AIADMK. In the 2021 Madurantakam constituency, AIADMK won with 86,000 votes against DMK's 83,000. TVK may draw anti-DMK voters, helping DMK retain power while its core support stays intact.