நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் அண்ணாமலை நகரில் தனியாக வசித்து வந்த 83 வயது மூதாட்டி முத்துலெட்சுமி மீது கொடூர பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டி தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துலெட்சுமியின் மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி தனித்தனி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவர் தனியாக வீட்டில் இருந்து வந்தார்.

வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாத அவருக்கு உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உதவி செய்து வந்தனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உறவினர்கள் உணவு கொடுத்து வந்தனர்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் உணவு கொடுக்க வந்த உறவினர் ஒருவர், மூதாட்டியை அலங்கோலமான நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
மூதாட்டி பேச முடியாத நிலையில் இருப்பதால் குற்றவாளிகள் குறித்த தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை எந்த உறுதியான துப்பும் கிடைக்காத நிலையில், பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கஞ்சா கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பவம் அறிந்ததும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் குவிந்து பரபரப்பை ஏற்படுத்தினர். மூதாட்டியிடம் கொடூர செயலில் ஈடுபட்ட கஞ்சா கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்; இல்லையெனில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூதாட்டியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
Summary in English : An 83-year-old woman living alone in Nagercoil area was found injured at her home. She was taken to Asaripallam Government Medical College Hospital for treatment. Police registered a case and are questioning a local youth. They are also checking for possible links to a group and reviewing nearby CCTV footage. Local residents gathered at the hospital demanding quick action.

