ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 43 வயது புஷ்பராணி என்பவர், தன்னை விட எட்டு வயது குறைவான 32 வயது மகேந்திரன் என்பவருடன் ரகசிய காதலில் ஈடுபட்டிருந்தார்.
அந்த உறவை அவரது மனைவியிடம் கூறிவிடுவதாக மிரட்டியதால், மகேந்திரன் தனது அக்கா கணவருடன் சேர்ந்து புஷ்பராணியை சேலம் மாவட்டத்தில் கொலை செய்து, சடலத்தை தருமபுரி மாவட்டத்தில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பராணியின் கணவர் வடிவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், 17 மற்றும் 15 வயது மகள்களுடன் அவர் வசித்து வந்தார். வருமானத்துக்காக கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோயிலில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த 25-ம் தேதி வேலைக்குச் சென்ற புஷ்பராணி வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. மகள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பெரும்பாழை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொப்பையாறு பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. புஷ்பராணிதான் என்று உறுதி செய்யப்பட்டது.
சடலத்தை மீட்ட கோபி போலீசார், புஷ்பராணியின் செல்போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். அதில் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி அடுத்த ஆலத்தூர் ஜீவாநகரைச் சேர்ந்த 32 வயது மகேந்திரன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்தது.
மகேந்திரனை பிடித்து விசாரித்தபோது, புஷ்பராணியுடன் அவருக்கு ரகசிய காதல் உறவு இருந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ததால் பழக்கம் ஏற்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
புஷ்பராணி அடிக்கடி தன்னை சந்திக்க அழைத்ததாகவும், மறுத்தால் “மனைவியிடம் கூறிவிடுவேன்” என்று மிரட்டியதாகவும் மகேந்திரன் போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்து வந்த புஷ்பராணியால் தவித்த மகேந்திரன், இதை தனது அக்கா கணவரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 35 வயது சதீஷ் (ஜெகதீஷ்) என்பவரிடம் தெரிவித்தார்.
இருவரும் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்யத் திட்டமிட்டனர். வெளி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்தால் சந்தேகம் வராது என முடிவு செய்தனர்.
ஒக்கேனக்கல் உல்லாச சுற்றுலா செல்லலாம் என புஷ்பராணியை மகேந்திரன் அழைத்தார். காரில் மகேந்திரன், சதீஷ் மற்றும் புஷ்பராணி மூவரும் சென்றனர். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டூர் கருப்பராயன் கோயில் அருகே உள்ள ஆளரவமில்லாத காட்டுப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
இறுதியில், “தன்னை மறந்துவிடு” என்று மகேந்திரனும், “தொந்தரவு செய்யாதே” என்று சதீஷும் மிரட்டினர். ஆனால் புஷ்பராணி “மகேந்திரனை மறக்க முடியாது” என்று விடாப்பிடியாகக் கூறினார்.
ஆத்திரமடைந்த இருவரும் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் புஷ்பராணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். சடலத்தை காரில் ஏற்றிச் சென்று தருமபுரி மாவட்டம் பெரும்பாழை அருகே தொப்பையாறில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
கோபி போலீசார் மகேந்திரன் மற்றும் சதீஷை கைது செய்து, கொலை நடந்த இடம் மற்றும் சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary in English : A 43-year-old widow Pushparani from Erode had a close relationship with 32-year-old colleague Mahendran. Facing repeated pressure and threats to inform his wife, Mahendran along with relative Satheesh took her on an outing. She was later found in Dharmapuri area. Police examined phone records and took the two men into custody for questioning.
