தவெக இளம் MLA ரமேஷ் கொடுத்த வாக்குறுதி தமிழகமே உற்றுநோக்கிய அதிரடி பேட்டி

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் ரமேஷ், தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை நேரடியாக தீர்க்க உறுதியளித்துள்ளார்.

கிராமங்களில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், பட்டா பிரச்சனையால் மக்கள் அல்லல்படுவதைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் அளித்த பேட்டியில், “ஸ்ரீரங்கம் தொகுதியில் அடிப்படை பிரச்சனை இல்லாதது போல் இன்னும் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

பல மக்கள் பட்டா பிரச்சனையால் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் எதிர்கொண்ட விஷயங்கள்” என்று கூறினார்.

மேலும், “மக்கள் அரசாங்க அலுவலகங்களைத் தேடி அங்கும் இங்கும் அலைய வேண்டிய சூழலை முற்றிலுமாக குறைக்க நான் முயற்சி செய்வேன். நானே ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் பிரச்சனைகளைக் கேட்டு, அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன்” என்று உறுதியளித்தார்.

குறைதீர்ப்பு செல், இணையதளம், அலுவலகம்

ரமேஷ் மேலும் கூறியதாவது: “எனது குறைதீர்ப்பு செல் போன் நம்பர், ஒவ்வொரு பகுதியிலும் சட்டமன்ற உறுப்பினரை எளிதில் அணுகுவதற்கான அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான தனிப்பட்ட வெப்சைட் ஆகியவற்றை தொடங்க இருக்கிறேன்.

மக்கள் தங்கள் பிரச்சனையைத் தீர்க்க அலைய வேண்டிய சூழலை உருவாக்க மாட்டேன். ஏற்கெனவே பிரச்சனையில் இருப்பவர்களை அரசாங்க உதவியைத் தேடி அலைய வைப்பது மேலும் அவலமானது. எனவே, அவர்களுடைய வேலையை எளிமையாக்கும் வகையில் எனது பணிகள் தொடரும்” என்றார்.

70 ஆண்டு திராவிட ஆட்சிக்கு எதிரான கோபம்

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியைப் பற்றி பேசிய ரமேஷ், “ஒட்டுமொத்த தமிழக மக்களும் கடந்த 70 ஆண்டு கால திராவிட ஆட்சியில் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் தவெகவின் வெற்றி. நாங்கள் மக்களுடைய குறைகளைக் கேட்டு அவற்றைச் சரி செய்வோம். மக்களுக்கு என்ன தேவையோ அதை அவர்கள் கேட்காமலே கொடுப்போம்” என்று வலியுறுத்தினார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் இளம் வேட்பாளரான ரமேஷின் இந்த அறிவிப்புகள், தொகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

English Summary : Ramesh, the newly elected MLA from Srirangam constituency, has promised to solve basic infrastructure and land document issues in the area. He plans to personally visit villages to understand local problems and will establish a grievance cell with phone number, offices and a dedicated website for easy public access. He thanked the voters.