சேலம் : விநாயகா மிஷன்ஸ் கல்லூரியில் மாணவிக்கு பா*யல் கொடுமை! குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!

மாவட்ட ஆட்சியர் உத்தரவுக்குப் பிறகு அதிரடி; நிர்வாகத்தின் மீது தேசிய மருத்துவ ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சேலம்: விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஒரு மாணவி, இரு பேராசிரியர்களால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது.

கல்லூரி நிர்வாகம் இந்த புகாரை முறையாக விசாரிக்காமல் மூடி மறைக்க முயன்றதாகவும், மற்றொரு பேராசிரியர் தேர்வு மதிப்பெண்களை குறைப்பதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, துணிச்சலுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த மாணவியின் புகாரின் அடிப்படையில், கல்லூரி நிர்வாகம் கடந்த ஜூன் 21ஆம் தேதி அந்த இரு பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த மாணவி தனது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்ததாகவும், அவரது அறிவாற்றல் காரணமாக பேராசிரியர்கள் உட்பட பலரின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், கல்லூரியில் பணியாற்றும் ராம்குமார் மற்றும் சுரேந்தர் ஆகிய பேராசிரியர்கள் அவரை தவறான விதத்தில் அணுகி, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக மாணவி குற்றம் சாட்டியுள்ளார். முதலில் இதை எதிர்கொண்ட மாணவி, அதைத் தாண்டி படிப்பில் கவனம் செலுத்த முயன்றார்.

ஆனால், பேராசிரியர்கள் இருவரும் அடுத்தடுத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுமைகளை வீட்டில் தெரிவித்த மாணவிக்கு, பெற்றோர்கள் தைரியம் அளித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்க அறிவுறுத்தினர்.

அதன்படி மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி புகார் அளித்தார். ஆனால், கல்லூரி நிர்வாகம் இந்த புகாரைப் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், விவகாரத்தை மூடி மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், இன்னொரு பேராசிரியர் பிரவீண் செல்வம், “நீ மட்டும் இந்த புகாரை வாபஸ் வாங்காவிட்டால் தேர்வில் உன் மதிப்பெண்களை குறைத்துவிடுவேன்” என்று மிரட்டியதாக மாணவி தெரிவித்துள்ளார்.

தைரியமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்த மாணவி

தனக்கு நடந்த கொடுமை இனி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், ரொம்ப தைரியத்துடனும் துணிச்சலுடனும் கடந்த மே மாதம் 7ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை நேரில் சந்தித்தார் மாணவி.

அங்கு தனக்கு நடந்த பாலியல் தொல்லை மட்டுமல்லாமல், கல்லூரியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் அடுக்கடுக்காக பட்டியலிட்டு புகார் அளித்தார்.

அந்த புகாரில், கல்லூரியில் சட்டவிரோத மருத்துவ சேர்க்கைகள் (இல்லீகல் அட்மிஷன்ஸ்) நடைபெறுவதாகவும், நோயாளிகளுக்கான முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்றும், தகுதியான மருத்துவர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என்றும், சில மருத்துவர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விரிவாக எடுத்துரைத்தார்.

ஆட்சியர் உத்தரவு – விசாரணை தொடக்கம்

மாணவியின் புகாரைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ கல்வி இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கல்லூரி நிர்வாகத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியது. 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலும், கல்லூரி நிர்வாகம் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, கடந்த ஜூன் 21ஆம் தேதி விநாயகா மிஷன்ஸ் கல்லூரி நிர்வாகம், பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய ராம்குமார் மற்றும் சுரேந்தர் ஆகிய இரு பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இன்னும் நடவடிக்கை வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

இரு பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், புகார் கொடுத்த மாணவி பிரவீண் செல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவியின் புகாரை முறையாக விசாரிக்காமல் மூடி மறைக்க முயன்ற கல்லூரி நிர்வாகத்தின் மீது தேசிய மருத்துவ ஆணயம் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தைரியமான புகார், மருத்துவக் கல்லூரிகளில் பெண் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

English Summary : A first-year medical student at Vinayaka Missions Kirupananda Variyar Medical College in Salem reported inappropriate conduct by two professors. After the college allegedly tried to suppress the issue and another faculty member issued threats, she approached the Salem District Collector on May 7 detailing various irregularities including improper admissions and duty issues. This prompted an inquiry leading to the dismissal of the two professors. Activists seek further steps.