பன்றிக்கறி கடை வைக்கும் வேடன்? செய்தி பரவியதும் பல்டி அடித்து சொன்னதை பாருங்க!

சவுதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் உணவகத்தைத் தொடங்கப் போவதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை, மலையாள ராப் பாடகர் வேடன் முற்றிலும் மறுத்துள்ளார். இது உண்மைக்குப் புறம்பானது என்றும், அத்தகைய எந்த அறிக்கையையும் தான் வெளியிட்டதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

வேடன் வெளியிட்ட அறிக்கையில், “சவுதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு உணவகத்தைத் தொடங்கப் போவதாகவும், அது தொடர்பாக நான் அறிக்கை வெளியிட்டதாகவும் சில சமூக ஊடகப் பதிவுகள் பரவி வருகின்றன.

இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நான் வெளியிட்டதில்லை. சவுதி அரேபியாவிலோ அல்லது வேறு எந்த வளைகுடா நாட்டிலோ ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் அல்லது உணவு சார்ந்த தொழில் தொடங்கும் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சவுதி அரேபியாவுக்குச் செல்வது நிகழ்ச்சிக் கலைஞராகத்தான் என்றும், அங்குள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரிலேயே இது நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டின் சட்டங்கள், நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களைத் தான் எப்போதும் மதிப்பதாகவும், அதற்கு எதிரான தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையோ செயலையோ மேற்கொண்டதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தவறான தகவல்கள் தற்செயலானவை அல்ல என்றும், ஒரு கலைஞன் கீழ்மட்டத்திலிருந்து உயர்ந்து வருவது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தவறான பதிவுகளைப் பரப்பிய கணக்குகள் குறித்து அவரது குழு ஆதாரங்களைச் சேகரித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தத் தகவலையும் பகிர்வதற்கு முன் அதன் உண்மைத் தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த மறுப்பு வெளியான பிறகு சமூக வலைதளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு முன்னால் வேடன் வெளிப்படையாகப் பேசிய கருத்துகள் இப்போது மீண்டும் நினைவுகூரப்படுகின்றன. 

ஜூன் 2026-ல் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “மாட்டுக்கறியை நான் விரும்பிச் சாப்பிடுவேன்.காலையிலும் மாலையிலும் அதைத்தான் சாப்பிடுவேன். எனக்குப் பிடிப்பதை நான் சாப்பிடுவேன். உங்களுக்குப் பிடித்தால் சாப்பிடுங்கள், பிடிக்காவிட்டால் விட்டுவிடுங்கள்” என்று அவர் கூறியிருந்தார். ஒரு மனிதனின் உணவுத் தேர்வு தனிப்பட்ட உரிமை என்றும் அவர் அப்போது வலியுறுத்தியிருந்தார்.

இந்தியாவில் உணவுத்தேவை தனிப்பட்ட உரிமை என பேசும் இதே வேடன், சவூதி அரேபிய என்றதும் அந்த நாட்டில் கலாச்சாரம், பழக்க வழக்கம் என பல்டி அடிக்கிறார். 

இந்த இரண்டு நிலைப்பாடுகளையும் ஒப்பிட்டு, “ஒரே நபர் இரு வேறு நாடுகளில் இரு வேறு விதமாகப் பேச முடியுமா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. சிலர் இதை இரட்டை நிலைப்பாடு என்று விமர்சிக்கின்றனர். வேடன் தரப்பில் இதுவரை இந்த ஒப்பீட்டுக்கு நேரடியான பதில் வெளியாகவில்லை. அவரது அறிக்கை உணவக வதந்தியை மட்டும் மறுத்து, அவரது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது.

வேடன் கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர். இயற்பெயர் ஹிரந்தாஸ் முரளி. அவரது பாடல்கள் சாதி, சமூக அடக்குமுறை போன்ற பிரச்சினைகளை முன்வைப்பதால் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். வளைகுடா நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 6 அன்று ஷார்ஜாவில் அவரது நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் பரவுவதும், கலைஞர்களின் உணவுப் பழக்கங்கள், நாட்டுக்கு நாடு மாறும் நிலைப்பாடுகள் குறித்த விவாதங்களும் தற்போது சமூக ஊடகங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

வேடன் தரப்பு தவறான பிரச்சாரங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Summary in English : Vedan, a popular Malayalam rapper, has denied circulating claims that he plans to open a pork restaurant in Saudi Arabia. He clarified the reports are completely false and that he is visiting only as a performing artist on invitation. Social media users have noted contrast with his earlier public comments supporting personal food choices in India, sparking debate on consistency across different countries.
------Advertisement------
------Advertisement------