சென்னை: பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்த கால காதல் உறவு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமுடன் இருந்த உறவு முறிவு பற்றிய வதந்திகள் பரவி வந்த நிலையில், அனுபமா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களையும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களையும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

அனுபமாவும் துருவ் விக்ரமும் இணைந்து நடித்த ‘பைசன்’ படப்பிடிப்பின் போது இருவரும் காதலிப்பதாக 2025-ல் வதந்திகள் எழுந்தன. இருவரும் அதை உறுதிப்படுத்தவில்லை; மறுக்கவும் இல்லை.
பின்னர் அனுபமா இன்ஸ்டாகிராமில் “இறந்த முனையை விட்டுவிட்டால் தான் அமைதி கிடைக்கும்” என்ற பொருளில் பதிவு போட்டார். அதையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவின. இந்த நிலையில் தான் அனுபமா டான்யா வர்மாவுடன் நடந்த பேட்டியில் தனது அனுபவங்களை வெளிப்படையாகப் பேசினார்.
“வெளியே நன்றாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன்”
பேட்டியில் அனுபமா கூறியதாவது:
“கடந்த சில ஆண்டுகளாக வெளியே நான் நன்றாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே மன அழுத்தம், பதற்றம், பேனிக் அட்டாக், கை-கால்கள் நடுக்கம், தொடர் தலைவலி, கண் துடிப்பு, எடை குறைவு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்தேன். இரவு முழுவதும் அழுதுவிட்டு, மறுநாள் காலையில் படப்பிடிப்புக்குச் சென்று நடித்தேன்.
என் பாட்னர் ‘பிரிந்துவிடலாம்’ என்று சொல்லிவிட்டு, இரண்டே நாட்களில் ‘நீயில்லாமல் வாழ முடியாது’ என்பார். இது உளவியல் ரீதியான பிரச்சினை என்று நினைத்து இருவரும் கப்பிள்ஸ் தெரபிக்குச் சென்றோம். ஆனால் அப்போது அவர் தனது உண்மையான சுயத்தை அங்கு வெளிப்படுத்தவில்லை.
அவரின் காதல் உண்மையா, வெறுப்பு உண்மையா, மன்னிப்பு கேட்டது உண்மையா என்று இன்றும் என்னால் சொல்ல முடியவில்லை. காதலித்த தருணங்களை நினைத்தால் அது உண்மையாகத் தெரிகிறது. அதேபோல் கோபம் வந்த தருணங்களையும் நினைத்தால் அவையும் உண்மையாகவே தெரிகிறது.
இந்த மன உளைச்சலால் கண்ணில் பிரச்சினை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தேன். கஷ்டமான காலத்தில் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்தபோதும் அவர் என்னுடன் ஆறுதலாக இல்லை.”
“மாற்றமே வேண்டும்… மன்னிப்பை விட நடத்தை மாற்றம்”
எதிர்கால துணையிடம் எதிர்பார்க்கும் மிகப்பெரிய விஷயம் பொறுப்புணர்ச்சி என்று அனுபமா தெளிவாகக் கூறினார்.
“மன்னிப்பை விட நடத்தையில் வரும் மாற்றத்தையே நான் நம்புகிறேன். மன்னிப்பு கேட்பது வெறும் ஈகோவை விட்டுக்கொடுப்பது. ஆனால் மாறுவதற்கு உண்மையான முயற்சி தேவை. முன்பு போல ஒருவரை கண்மூடித்தனமாக நம்பும் நபராக இனி இருக்க மாட்டேன்.
நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. நடந்த சம்பவங்களால் நான் ஒரு பாதிக்கப்பட்டவள் கிடையாது. அதிலிருந்து மீண்டு வந்தவள். இனி என் வாழ்க்கையை மீண்டும் புதிதாகக் கட்டமைக்கப் போகிறேன்.”
அனுபமா இந்தப் பேட்டியில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது துருவ் விக்ரமைக் குறிப்பதாகவே பரவலாகப் பேசப்படுகிறது. இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறவை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
இந்தப் பேட்டி வெளியான பிறகு அனுபமாவுக்கு ஆதரவு செய்திகள் பெருமளவில் வந்துள்ளன. அவர் இப்போது தனது வாழ்க்கையை புதிதாகத் தொடங்குவதற்கான பயணத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
Summary in English : Actress Anupama Parameswaran recently shared details of her past relationship in an interview. She spoke about prolonged mental stress, anxiety, panic attacks, trembling, headaches, eye problems that needed surgery, and weight loss.
Her partner would suggest separation and then say he could not live without her. They attended couples therapy together. She now values responsibility and real behavioural change over apologies, and is focused on rebuilding her life. Social media connected the remarks to earlier Dhruv Vikram rumours, though she named no one.

