அந்த ஒரே படத்தில் கார் வாங்கினேன், வீடு வாங்கினேன், கல்யாணமும் பண்ணினேன் - உணர்ச்சி வசப்பட்ட பாண்டியராஜன்..!


தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் வெற்றிபெற்ற பலர் இருக்கிறார்கள். ஆனால் இயக்குநராகவும் நாயக நடிகராகவும் வெற்றிபெற்றவர்கள் சிலர்தான். அந்த வெகு சிலரில் ஒருவர்தான் ஆர்.பாண்டியராஜன். 
 
சென்னை சைதாப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவரான பாண்டியராஜன் அரசுப் பள்ளி மாணவர். தமிழிசைக் கல்லூரியில் வயலின் இசையில் 'இசைச் செல்வம்' பட்டம் பெற்றார். 
 
பிற்காலத்தில் தமிழ் சினிமா குறித்து ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டம் பெற்றார். பாசத்திற்குரிய பாரதிராஜா அலை வீசிக்கொண்டிருந்த நேரம், சினிமாவில் ஆக்ட் குடுக்குறேன் என்ற ஆசையோடு பல இளைஞர்களை சினிமா பக்கம் ஈர்த்துக்கொண்டிருந்த காலகட்டம் அது.
 

இன்னும் வளரவே இல்ல நீயெல்லாம் நடிக்க போறியா..?

பாண்டியராஜனும் அப்படித்தான் சினிமா வாய்ப்புத் தேடி வந்தார். வழக்கம்போல் அவரது குள்ளமான உருவத்தால் இன்னும் வளரவே இல்ல, நீயெல்லாம் நடிக்க போறியா என்று ஏளனம் செய்து நிராகரித்தனர். 
 
அதனால்தான் தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா தூயவனிடம் அலுவலகத்தில் ப்யூனாக பணிபுரிந்தார். இந்த நேரத்தில்தான் இயக்குனர் பாக்யராஜ், லிவிங்ஸ்டன், ஜி.கே.குமார் போன்றோர் சக உதவி இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். 
 
இந்த கூட்டணி தான் தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்டை தொடங்கிவைத்தது. அதுதான் தாம் நடிப்பதற்கு ஏதுவான ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் ஸ்டைல். 
 

80's ட்ரெண்ட் செட்டர்கள்

 
 
ஆண்பாவம், பாட்டி சொல்லை தட்டாதே படங்களெல்லாம் இந்த ஸ்டைலின் உச்சம். பிரபு-ரேவதியை வைத்து 'கன்னிராசி' என்னும் திரைப்படத்தை இயக்கினார். 1985-ல் வெளியான அந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது. 
 
அடுத்தாக அவர் இயக்கிய 'ஆண்பாவம்' அதே ஆண்டு இறுதியில் வெளியானது அதில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிகராகவும் அறிமுகமானார் பாண்டியராஜன். 
 
அந்தப் படம் 225 நாட்கள் ஓடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதோடு பாண்டியராஜன் என்ற பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வரும் படமாகத் திகழ்கிறது. 
 

ஆண் பாவத்தால் கிடுகிடு வளர்ச்சி

 
 
இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களாலும் விரும்பிப் பார்க்கப்படும் கலகலப்பு மிக்க கிராமப் படமாக விளங்குகிறது. இந்தப் படத்தில் நகைச்சுவை மிளிரும் நாயக வேடத்தில் பாண்டியராஜன் நடித்திருந்த விதம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. 
 
விளைவாக நடிகராக வேண்டும் என்ற பாண்டியராஜனின் ஆசையை ரசிகர்களின் வரவேற்பின் மூலம் நிஜமானது. திருட்டு முழியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக்குவிசுக்கு நடையும் தான் நடிகர் பாண்டியராஜனின் அடையாளங்கள். 
 
சினிமாவைவிட்டு ஒதுங்கிவிடாமல் சமகால நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து வருகிறார் இவர். சமீபத்தில், "சீகர்" தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். 
 

 சீகர் விழாவில் உருக்கம்


விழாவில் பேசிய பாண்டிய ராஜன், தன்னை சாதாரண நடிகன் காமெடியன் என நினைக்கிறார்கள். அதை தாண்டி நான் பல சீரியஸான டாக்குமெண்ட்ரிகளையும் எடுத்துள்ளேன். 
 
அவை சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளன. நான் 10-ம் வகுப்பு வரை பிடித்து இயக்குனரான பின் அஞ்சல் வழியில் எம்.ஏ. எம்.ஃபில் படித்தேன். இப்போது நான் 3 பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். 
 
சினிமா நல்ல தொழில். அதனை நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள். என் உயரத்துக்கு நான் ஹீரோவாக நடிப்பேன் என ஆசைப்படக்கூடாது என்றார்கள். ஆனால் நான் நடித்தேன். "ஆண் பாவம்" என்ற படத்தை எடுத்தேன். அந்த ஒரே படத்தின் மூலம் வீடு வாங்கினேன், கார் வாங்கினேன். 
 
அதே வருமானத்தில், திருமணமும் செய்து கொண்டேன். உழைத்தால் வெற்றி நிச்சயம், வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான் என கூறினார்.

அந்த ஒரே படத்தில் கார் வாங்கினேன், வீடு வாங்கினேன், கல்யாணமும் பண்ணினேன் - உணர்ச்சி வசப்பட்ட பாண்டியராஜன்..! அந்த ஒரே படத்தில் கார் வாங்கினேன், வீடு வாங்கினேன், கல்யாணமும் பண்ணினேன் - உணர்ச்சி வசப்பட்ட பாண்டியராஜன்..! Reviewed by Tamizhakam on February 07, 2021 Rating: 5
Powered by Blogger.