சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இணையத்தில் முழு படமும் கசிந்து பரவியுள்ளது.
இதனால் திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ விமர்சனம் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மக்களை சென்று சேர்ந்து வரும் நிலையில், இது குறித்து விமர்சிக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது மிகவும் அபாயகரமானது என்று பலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

படத்தை தயாரித்த நிறுவனம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய அபாயம் இருப்பதால், விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை பகிரங்கமாகத் தெரிவிக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் படம் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தால், யார் வேண்டுமானாலும் அதன் கருத்துக்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ விமர்சனம் செய்ய முடியும்.
அப்போது படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையா, அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகளை மட்டும் புனைந்து மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதா என்பதை விவாதிக்க முடியும்.
ஆனால் தற்போது படம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ விமர்சனம் இல்லாத காரணத்தால் உண்மை தன்மையை மக்களுக்கு எடுத்துரைக்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் இந்தப் படத்தை விமர்சிக்கும் வகையில் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தார். “புகைப்படங்களிலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகத் தான் காட்டுவீர்களா?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய அமீரின் பதிவு பெரும் கவனத்தை ஈர்த்தது.
இது படத்தின் சில காட்சிகள் இஸ்லாமிய சமூகத்தை எதிர்மறையாக சித்தரிப்பதாகக் கூறப்படும் விவாதங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், இந்தப் படம் பொதுமக்களிடையே பரவியுள்ளது.
படத்தில் சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்று பொதுமக்கள் நம்பினால், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சிந்திக்க முடியவில்லை என்று பலர் கவலை தெரிவிக்கின்றனர்.
“இந்தப் படம் பொதுவெளியில் கண்டிப்பாக விமர்சிக்கப்பட வேண்டும்” என்று படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும், படத்தின் உண்மை நோக்கம் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
வரலாற்றில் நடந்த உண்மை நிகழ்வுகள், தற்போது நடைபெறும் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்களைப் பற்றி முழுமையாக ஆராயாமல், சில உண்மைகளை மறைத்தோ அல்லது பாதி உண்மையை மட்டும் சேர்த்தோ, ஒட்டுமொத்த படத்தையும் TVK கட்சிக்கு சாதகமான வகையில் உருவாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
“தன்னுடைய கட்சிக்கு ஆதரவாக பல உண்மை நிகழ்வுகளை துதித்து, அதை தவறாக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிகளை புனைந்திருக்கலாம்” என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில், படத்தை பார்த்த பலர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். “இந்தப் படத்தின் உண்மை நோக்கத்தை மக்கள் அறிய வேண்டும். அதிகாரப்பூர்வ வெளியீடு இல்லாவிட்டாலும், பொதுவெளியில் விவாதம் நடைபெற வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் இணைய கசிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விமர்சன சுதந்திரம் மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான உரிமை ஆகியவை பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை திரைத்துறை வட்டாரங்களிலும் எழுந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் இந்த கட்டத்தில், படத்தின் உள்ளடக்கம் மக்களிடையே எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்தே அடுத்தகட்ட விவாதங்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் படத்தை விமர்சிப்பது சட்டப்படி குற்றமா? அல்லது விமர்சனம் செய்பவரை பாதிக்குமா? என்ற விளக்கத்தை ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் மக்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம், இந்த படத்தை வெளியிட்டதே பாஜக+திமுக வின் கூட்டுசதி என்ற தொனியில் TVK கட்சியின் தலைமை நிர்வாகியாக இருக்கும் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.
English Summary : The film Jana Nayagan has fully leaked online before its official theatrical release. This has created a situation where critics cannot freely review it due to legal concerns from the production house.
Director Ameer expressed concerns on WhatsApp about the film's portrayal of certain communities. With elections approaching, viewers and social media users are calling for open public discussion on the film's content and possible political intentions linked to actor Vijay's party TVK.


