மஃப்டியில் பெண் கமிஷனர்! அத்துமீறிய 40 ஆண்கள்! நள்ளிரவில் சம்பவம்!

ஹைதராபாத்: தெலங்கானாவின் மல்கஜ்கிரி (மைல்கிரி) பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்ற முதல் பெண் போலீஸ் கமிஷனர் சுமதி, நடுராத்திரியில் சாதாரண பெண்ணாக மாறி அண்டர் கவர் ஆபரேஷன் நடத்தி 40 பேரை கையும் களவுமாக பிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த மே 1-ம் தேதி மல்கஜ்கிரி போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற சுமதி, பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக வெளியே வர முடியாத சூழல் இருப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.

நள்ளிரவு 12 மணிக்கு பேருந்து நிலையத்தில்...

இரவு 12 மணி அளவில் சீருடை அணியாமல், சாதாரண உடையில் ஒரு பொதுமகள் போல மல்கஜ்கிரி பேருந்து நிலையத்தில் தனியாக நின்றார் சுமதி. அவருக்கு துணையாக போலீஸ் அதிகாரிகள் தூரத்தில் மறைந்து கண்காணித்து வந்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு ஆண்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. பலர் சுமதியை சீண்டத் தொடங்கினர். மோசமான வார்த்தைகளால் பேசி, வம்பிழுத்தனர். சுமார் மூன்று மணி நேரம் இந்த ஆபரேஷன் நீடித்தது. இறுதியில், சீண்டிய 40 ஆண்களை போலீசார் குண்டுக்கட்டாக பிடித்தனர்.

பின்னர் அனைவருக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

பாராட்டுகள் பெருகின்றன

கமிஷனர் சுமதியின் இந்த துணிச்சலான நடவடிக்கை தெலங்கானா முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. “பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய கமிஷனரே களத்தில் இறங்கியது வரவேற்கத்தக்கது” என பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மல்கஜ்கிரியின் முதல் பெண் போலீஸ் கமிஷனரான சுமதி, பொறுப்பேற்ற முதல் நாளிலேயே பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தெலங்கானா போலீஸ் துறையில் பெண் அதிகாரிகளின் திறனுக்கு புதிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

Summary : Telangana's Malkajgiri Police Commissioner Sumathi, the first woman to hold the post, conducted an undercover operation at a bus stop late at night while dressed in plain clothes. She remained there for three hours and 40 individuals who approached her were taken into custody by the police team. Counselling was later provided to them on women's safety.