ரூபாய் 45 கோடி லாட்டரி வென்றவரின் தற்போதைய பரிதாப நிலை!

கேரளாவைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற நபர், சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் லாட்டரி சீட்டு வாங்கி அதிர்ஷ்டவசமாக 40 கோடி ரூபாய் பரிசு வென்றார். வரி, கமிஷன் உள்ளிட்ட அனைத்து கழிவுகளுக்குப் பிறகும் அவரது கைக்கு சுமார் 32 கோடி ரூபாய் கிடைத்தது.

ஆனால் இந்தப் பணம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன்பே, வங்கி மேலாளர் தொடர்பு கொண்டு டெபாசிட் செய்யுமாறு கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் உதவி கேட்டு தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த திடீர் தொந்தரவுகளைத் தாங்க முடியாமல், மனோஜ் தனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வேறொரு வீட்டிற்கு இரகசியமாக இடம் பெயர்ந்தார். தனது கைபேசி எண்ணையும் முற்றிலும் மாற்றிக்கொண்டார்.

இருப்பினும், அவரது உறவினர்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டு, தொடர்ந்து பல்வேறு வகைகளில் பண உதவி கேட்டு நச்சரித்து வந்தனர். “50 லட்சம் மட்டும் கொடு”, “ஒரு கோடி மட்டும் கொடு” என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்ததாக அவர் கூறுகிறார்.

பணத்தை ஒரு ரூபாய் கூட வீண் செலவு செய்யாமல்...

மனோஜ் பணத்தைச் செலவு செய்வதில் மிகுந்த கவனத்துடனும், கடுமையான ஒழுக்கத்துடனும் செயல்பட்டார். தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருப்பதால், அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கும் இந்தப் பணம்தான் அடிப்படை என்று கருதினார். “இனி நாம் சம்பாதிக்கும் சொத்து ஒரு பக்கம் இருந்தாலும், இந்தச் சொத்தை இழந்துவிடக்கூடாது” என்று உறுதியாக இருந்தார்.

அவரது தந்தை பல ஏக்கர் நிலத்தை வைத்திருந்தும், உறவினர்களுக்கு உதவி செய்வதாக அடமானம் வைத்து விற்று பல சொத்துக்களை இழந்ததை நினைவு கூர்ந்த மனோஜ், “என் தந்தை செய்த தவறை நான் என் பிள்ளைகளுக்கு செய்துவிடக்கூடாது.

அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்” என்று முடிவு செய்தார். இதனால், பணத்தின் பெரும் பகுதியை நிலம் வாங்குவதில் முதலீடு செய்தார். இந்த விவரங்களை எதையும் உறவினர்களிடம் தெரிவிக்காமல், ரகசியமாகவே செயல்பட்டார்.

உறவினர்களின் புறக்கணிப்பு...

பண உதவி கேட்டு நச்சரித்த உறவினர்களுக்கு மனோஜ் உதவ மறுத்துவிட்டார். இதனால், குடும்ப விழாக்கள், திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் அவரது குடும்பத்தை அழைக்காமல் உறவினர்கள் புறக்கணிக்கத் தொடங்கினர்.

தனது மகள்கள் திருமண வயதை நெருங்கிவிட்ட நிலையில், உறவினர்களின் வீட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய சூழல் வரும்போது ஏற்படும் பயம் குறித்தும் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ...

இந்த நிலையில்தான் மனோஜ் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் கண்ணீர் மல்க, பின்வருமாறு கூறினார்:

“நான் எங்கே இருக்கிறேன், என்ன செய்கிறேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னுடைய தொலைபேசி எண் அனைவரிடமும் இருக்கிறது. உதவி கேட்பதற்காக எல்லோரும் என்னைத் தொடர்பு கொண்டீர்கள். ஆனால் உங்கள் வீட்டில் ஏதேதோ விழாக்கள் நடக்கிறது. எந்த விழாவுக்கும் எங்கள் குடும்பத்தை நீங்கள் அழைக்கவில்லை.

நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என்னுடைய மகள்கள் திருமண வயதை நெருங்கிவிட்டார்கள். என்னுடைய உறவினர்கள் ஆகிய உங்களின் வீட்டிற்கு வந்து அழைப்பு விடுக்க வேண்டும் என்றால் எனக்கு ஒரு விதமான பயமாக இருக்கிறது.

எதற்காக இந்த நிலைக்கு என்னை ஆளாக்குகிறீர்கள்? நான் செய்த தவறு என்ன? என் தந்தை செய்த தவறை நான் திரும்பச் செய்யக்கூடாது என்றுதான் நான் கவனமாக நடந்து கொண்டேன். நான் யாருக்காவது தீங்கு செய்தேனா? ஏன் என்னை எல்லோரும் இப்படி ஒதுக்குகிறீர்கள்?”

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி, பரவலான பேசுபொருளாக மாறியுள்ளது.

பணம் இருந்தும் உறவு இல்லாத வலி...

வீடியோவிற்கு வரும் கருத்துக்களில் பெரும்பாலானோர், “எவ்வளவு பணம் சொத்து இருந்தாலும், உறவினர்களுடன் கலந்து கொள்ள முடியாத வலி என்னவென்று இந்த மனிதன் உணர்ந்திருக்கிறார்.

அவருடைய உள்ளத்தில் உறவு, அன்பு, பாசம் எல்லாம் ஏங்குகிறது” என்று குறிப்பிட்டு வருகின்றனர். பணம் வந்த பிறகு உறவுகள் எப்படி மாறுகின்றன, செல்வம் எப்படி தனிமையைத் தருகிறது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனோஜ் குமார் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுத்த முடிவுகள், இன்று அவரை உறவினர்களிடமிருந்து தனிமைப்படுத்தியிருப்பது, இந்த வீடியோ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பணமும் சொத்தும் இருந்தாலும், உறவுகளின் அன்பும் ஆதரவும் இல்லாதபோது ஏற்படும் மன உளைச்சலை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

English Summary : A man from Kerala won a significant amount in a Dubai lottery eight years ago. After receiving the funds, he faced persistent financial requests from relatives and friends. He invested most of it carefully in land for his children's future and relocated to manage disturbances. He recently shared an emotional video about feeling isolated from family functions, which became widely discussed online.