ரிதன்யா பெற்றோர் எடுத்த திடீர் முடிவு - மீண்டும் பரபரப்பு

அவினாசி : வரதட்சனை கொடுமைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா என்னும் இளம்பெண்ணின் தந்தை, அவினாசி சட்டமன்ற உறுப்பினர் கமலி அவர்களிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். மகளின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரிதன்யாவின் தந்தை தனது மகளின் மரணம் தொடர்பாக கூறியதாவது:

“இறந்த என் மகள் ரிதன்யாவினுடைய விசாரணைக்காக அவினாசி சட்டமன்ற உறுப்பினர் கமலி அவர்களை நேரில் சந்தித்து, நடைத்துறை அமைச்சரை சந்தித்து என் மகளின் இறப்புக்கு நீதி கோரி விண்ணப்பம் கொடுத்துள்ளேன். இது நேரடியாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சென்று, விசாரணைக்கு நீதி வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.”

மகள் இறந்து 11 மாதங்கள் ஆகியும் போலீசார் முறையான விசாரணை செய்யவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். “எங்களையே இதுவரை வந்து விசாரிக்கவில்லை. முறையான விசாரணை இல்லை” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: “பாப்பா பயன்படுத்திய பணம், நகை, வரதட்சனையாக வாங்கிய கார், நகைகள் உள்ளிட்டவை இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை.

எங்களைப் போன்ற பெற்றோர்கள் குழந்தையை இழந்து, கோர்ட்டு கேஸ் என்று அழுதுகொண்டிருக்கும் நிலையில், எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறதா? முந்தைய அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் இவ்வளவு பெரிய இழப்பையும் வருத்தத்தையும் சந்திக்க நேர்ந்தது.”

“என் பெண்ணுக்கு கிடைக்கும் நீதி, உலகில் உள்ள எல்லா பெண்களுக்கும் பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்த அவர், தற்போதைய அரசு தலையிட்டு உரிய நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய ரிதன்யாவின் தந்தை, “நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம். சரியான விதத்தில் விசாரித்து என் பிள்ளைக்கு சீக்கிரம் நீதி கிடைக்க வேண்டும். இழந்த வருஷமாக பரிதவித்து சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

அரசும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்த அரசாவது என் பிள்ளைக்கு சரியான நீதி வாங்கித் தர வேண்டும். எனக்கு முறையான நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை” என்றார்.

“எல்லா பக்கமும் முறையிட்டும் எங்களை சரியாக விசாரிக்கவே இல்லை. என் பிள்ளையோடு போன பொருட்களும் வரவில்லை. என் பிள்ளையை நான் பறிகொடுத்து நின்றுகொண்டிருக்கிறேன்.

இன்னும் பைத்தியக்காரத்தனமாக சுற்றிக்கொண்டிருக்கிறோம். கொலை செய்தது போலத்தான் என் பிள்ளையை இழந்தேன். ஆனால் எதுவுமே கண்டுகொள்ளாமல் அவர்கள் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசு சரியான முடிவு எங்களுக்கு கொடுக்க வேண்டும். நல்ல நீதி கொடுக்க வேண்டும். என் பிள்ளைக்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது போன்ற நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வருகிறோம்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

ரிதன்யாவின் மரணம் தொடர்பான வழக்கு தற்போது சரியான திசையில் செல்ல வேண்டும் என உள்ளூர் பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். வரதட்சனை கொடுமைக்கு எதிரான சட்டங்களின் கீழ் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் வலியுறுத்தல்.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் வரதட்சனை கொடுமை இன்னும் தொடர்வதை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : Rithanya's father submitted a petition to Avinashi MLA Kamali seeking justice for his daughter's case. Eleven months after the incident, he stated that proper investigation has not been conducted and requested the Chief Minister Joseph Vijay to intervene. He also highlighted that valuables including cash, jewellery and car have not been returned.