இந்தியாவுக்கு வருகை தரும் ஆஸ்திரேலிய பிரதமர் !

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மார்ச் 8 முதல் மார்ச் 11 வரை நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாகும்.

வெளிவிவகார அமைச்சின் (MEA) படி, ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் சுற்றுலா அமைச்சர் செனட்டர் டான் ஃபாரல் மற்றும் வளங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் மேடலின் கிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும், உயர்மட்ட வணிகக் குழுவும் வருவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது வருகைக்கு முன்னதாக, அந்தோணி அல்பானீஸ் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், “இன்று நான், அமைச்சர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் குழுவை இந்தியாவிற்கு அழைத்து வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான அழைப்பின் பேரில், நாங்கள் வருகிறோம். அகமதாபாத், மும்பை மற்றும் புது டெல்லியை காண வருகிறோம்.”

ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய வருகைக்கான அட்டவணை

ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் புதன்கிழமை மாலை 4.10 மணிக்கு (IST) அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார். அதன் பிறகு மாலை 5.20 மணிக்கு ராஜ்பவன் ஹோலி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மார்ச் 9 (வியாழன்) அன்று, அந்தோணி அல்பனீஸ் மும்பை செல்கிறார்.

அதனை அடுத்து  மார்ச் 10 ஆம் தேதி, ஆஸ்திரேலிய பிரதமர் புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சடங்கு வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார். அதே நாளில், அல்பானிஸ் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்.

--Advertisement--

அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திலும், ஜனாதிபதி திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனிலும் சந்திக்கிறார். மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளையும் இரு பிரதமர்களும்  காணவுள்ளனர்.

இதுபோல பல செய்திகளை உடனுக்குடன் கான நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.