திருவண்ணாமலை, அக்டோபர் 01, 2025: ஆந்திர மாநிலத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை காய்கறி சந்தைக்கு வந்த சரக்கு வாகனம், பணி முடிந்து ஆந்திராவுக்கு திரும்பியபோது நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கொடுத்த ஏந்தல் புறவழிச்சாலையில் பயணித்த அந்த வாகனத்தை, இரவு ரோந்து பணியில் இருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் ஆகியோர் வழிமறித்தனர்.

வாகனத்தில் ஆந்திராவைச் சேர்ந்த இரு சகோதரிகள் இருந்ததை கண்ட காவலர்கள், 18 வயது இளம்பெண்ணை மட்டும் புல்லட் பைக்கில் ஏற்றிக்கொண்டு, ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாடு அருகேயுள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு காவலர் சுரேந்தர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் சுரேஷ்ராஜை அழைத்து அவரும் அதே குற்றத்தை செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், இரு காவலர்களும் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
நள்ளிரவு 12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, அதிகாலை 4 மணியளவில் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பெண்ணை அழுது கொண்டிருக்க கண்டு விசாரித்தார்.
நடந்தவற்றை அறிந்த அவர், பெண்ணை அவரது அக்காவும் வாகன ஓட்டுநரும் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
இந்த தகவலை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ், மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது, பெண்ணின் வாக்குமூலம் மற்றும் ரோந்து பணி பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் காவலர்கள் சுரேந்தர் மற்றும் சுரேஷ்ராஜ் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இரு காவலர்களும் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆறு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழு, சம்பவ இடத்தில் மேலும் விசாரணை நடத்தி வருகிறது.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலர்களே இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது, மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Summary : In Tiruvannamalai, two policemen, Surender and Sureshraj, allegedly raped an 18-year-old girl from Andhra Pradesh near a crematorium after intercepting a goods vehicle. The victim was hospitalized, and the accused were arrested. The incident has sparked widespread outrage.


