தனி தொகுதியில் கிருஸ்துவர் போட்டியிடுவதா? இது ஜனநாயக விரோதம்! இந்து முன்னணி அதிரடி கோரிக்கை!

சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் (எக்மோர்) தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழன் பிரசன்னா ஒரு கிறிஸ்தவர் என்பதால், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

இந்தக் கோரிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 46 தனித் தொகுதிகள் (பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டவை) உள்ளன.

இந்தத் தொகுதிகளில் இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற அரசியல் சட்ட விதிமுறையை சுட்டிக்காட்டினார்.

தமிழன் பிரசன்னா கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர் என்பதால், அவர் இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது.

எனவே, அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

அவர்கள், “பட்டியலின மக்களின் உரிமையை மோசடி செய்யும் முயற்சி” என்று திமுகவை விமர்சித்துள்ளனர். அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை ஏமாற்றும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

திமுகவின் இந்த முடிவு இந்து அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் தொகுதியில் தமிழன் பிரசன்னா போட்டியிடுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கும் நிலையில், இந்தச் சர்ச்சை மேலும் பெரிய விவாதத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Hindu Munnani has demanded the rejection of Tamilan Prasanna's nomination from the Egmore reserved constituency in Tamil Nadu. The organization stated that since he follows Christianity, he cannot contest from a seat reserved for Hindu Scheduled Caste members. This has created significant discussion in Tamil Nadu politics.