செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (25) என்பவரின் மனைவி மோனிகா (21), நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
மருத்துவப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் (மொப்பெட்) மதுராந்தகம் நோக்கி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி அதிவேகத்தில் வந்த எல்6 (L6) கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, வாசுதேவன்-மோனிகா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இருசக்கர வாகனம் சாலையில் தீப்பற்றி எரிந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோனிகா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த கரு குழந்தையும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தை ஏற்படுத்திய காரை பின்னால் வந்த மற்றொரு கார் ஓட்டுநர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார். அந்த காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாகவும், காரின் டேஷ் கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை மதுராந்தகம் காவல் ஆய்வாளர் வெங்கடேசனிடம் ஒப்படைத்ததாகவும் தெரிய வருகிறது.
இதன் அடிப்படையில் காரை பறிமுதல் செய்த போலீசார், அதை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விக்னேஸ்வரன் திமுக அபிமானி எனவும், அவரது மனைவி ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது. திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்று திரும்பும் வழியில் அதிவேகத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் விக்னேஸ்வரனை அரசியல் அழுத்தம் காரணமாக கைது செய்யாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
காவல் ஆய்வாளர் வெங்கடேசனிடம் இது குறித்து விசாரித்தபோது, அவர் பதற்றத்துடன் பதிலளித்ததாகவும், "ஓட்டுநர் போதையில் இல்லை", "ஹைவேயில் விபத்துகள் இயல்பானவை", "இதை பெரிதுபடுத்த தேவையில்லை" எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆரம்பத்தில் காரில் கொடி இல்லை என்று மறுத்த காவல் ஆய்வாளர், பின்னர் விசாரணைக்குப் பிறகு திமுக கொடி இருப்பதை ஒப்புக்கொண்டதாகவும், ஓட்டுநரை கைது செய்யவில்லை என்றும், "செக் பண்ணியாச்சு, அனுப்பியாச்சு" எனக் கூறியதாகவும் தகவல்கள் உள்ளன. வீடியோ ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருந்தபோதிலும், வழக்கில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மோனிகாவின் உறவினர்கள், சாலை விதிகளை மீறி அதிவேகத்தில் வந்து கர்ப்பிணி மற்றும் கரு குழந்தையின் உயிரைப் பறித்த ஓட்டுநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிய வருகிறது. முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : A pregnant woman and her husband were traveling on a two-wheeler on the Chennai-Trichy national highway near Maduranthakam when a speeding L6 car collided with them. The woman sustained severe injuries and later passed away in hospital. The car, reportedly bearing a DMK flag, was seized and the driver questioned by police.


