தூத்துக்குடி : சாத்தான்குளம் போலீஸ் காவலர்கள் இருவரை சிறையில் அடித்துக் கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்த பின்னரும், அவர்களுக்கு தமிழக அரசு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்குவதை கண்டித்து ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது.

சமூக ஆர்வலர்கள், தகவல் அறியும் உரிமை (RTI) ஆர்வலர்கள் சார்பில் நடைபெறும் இந்த மனு கொடுக்கும் போராட்டம், டிராபிக் ராமசாமியின் பிறந்தநாள் நாளில் நடைபெறுகிறது.

இந்திய அரசு ஊழியர் விதிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் ஒழுங்கு நடவடிக்கை விதிகளின்படி, அரசு ஊழியர் சிறை சென்ற உடனேயே சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.

FIR பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு, பதவி நீக்கம் அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் சாத்தான்குளம் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாகியும் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை என ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்காததால், குற்றவாளிகளுக்கு 75% (முக்கால்) சம்பளம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நீதிமன்றம் அவர்களை கொலை குற்றவாளி என அறிவித்த பின்னரும், அரசு அவர்களை பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவில்லை.

ஏப்ரல் மாத சம்பளம் கூட அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக ஆர்வலர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

“நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த உடனேயே அவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பது இந்திய சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு விதிகளில் தெளிவாக உள்ளது. பல நீதிமன்ற தீர்ப்புகளும் இதையே வலியுறுத்துகின்றன.

ஆனால் தமிழக காவல்துறையும் தமிழக அரசும் சாத்தான்குளம் கொலை குற்றவாளிகளை இன்னும் பதவியில் வைத்திருப்பதும், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கொடுப்பதும் சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்குகிறது.

காவல்துறையினர் கொலை செய்தாலும், அவர்களை காவல்துறையே காப்பாற்றும், குடும்பத்துக்கு சம்பளம் கொடுக்கும் என்பது போன்ற தவறான செய்தியை இது மக்களுக்கு தருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இறந்துபோன ஒரு காவலருக்கு கருணை அடிப்படையில் பதவி கொடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ஆர்வலர்கள், “கொலை குற்றவாளிகளுக்கு சம்பளம் கொடுப்பது பொதுமக்களையும் வாக்காளர்களையும் ஏமாற்றுவதாகும்” என்று கண்டித்துள்ளனர்.

ஏப்ரல் 1-ம் தேதி (நாளை) காலை தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில், தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது.முக்கிய கோரிக்கை:

  • சாத்தான்குளம் கொலை வழக்கில் நீதிமன்றம் தண்டித்த காவலர்களை உடனடியாக காவல்துறை பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
  • அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் எந்த சம்பளமும் வழங்கக் கூடாது.

இந்த போராட்டம் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், காவல்துறையில் நிலவும் “தன் மக்களைக் காப்பாற்றும்” மனப்பான்மையை மாற்றவும் உதவும் என ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English Summary : Government employees must be suspended immediately upon legal proceedings and removed from service within 90 days as per rules. However, in the Sathankulam case, officers convicted by court continue in service receiving 75% salary for six years using public funds. Activists will submit a petition on April 1 in Thoothukudi demanding immediate dismissal and stopping salary payments.