முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி.. உண்மையில் இது தான் நடந்தது.. கதறும் A2D நந்தா.. கொடூரம்.. அதிர்ச்சியில் சோல்ஜர்ஸ்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்த ‘தலைவனே 2.0’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தொழில்நுட்ப யூடியூபர் A2D நந்தா, தான் மற்றும் தனது நண்பர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நந்தா தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: “நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தபோது, ‘முதலமைச்சரிடம் நீங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கலாம், உங்கள் விருப்பங்களைத் தெரிவிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதை நம்பி நாங்கள் சென்றோம்.

ஆனால் அங்கு சென்றவுடன் எங்களிடம் ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டு, ‘இந்தக் கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்’ என்று கூறினார்கள். அந்தக் கேள்விகளைப் படித்த பிறகு, ‘எங்கள் பாலோவர்களே நம்மைத் தாக்கிவிடுவார்கள்; இது பெரிய பின்னடைவாக மாறிவிடும்’ என்று என்னுடன் வந்த எனது நண்பர் பிரபுவுடன் முடிவு செய்து, நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிப் போக முயன்றோம்.

ஆனால், அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்புப் படை மற்றும் பறக்கும் படையினர் வளாகத்திற்கு வந்துவிட்டனர். வெளியே செல்ல முயன்றபோது, ‘உள்ளே செல்லுங்கள், இது ப்ரோட்டோக்கால், பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும்’ என்று கூறினார்கள்.

அப்போது கூட நாங்கள் கிளம்புகிறோம் என்று கிளம்ப முயன்றோம், அவர்களை எதிர்த்து நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதால் உள்ளே போனோம். பாதுகாப்புப் படையினர் அனைவரும் அதிகாரபூர்வ சீருடையில் நின்றுகொண்டிருந்ததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “நான் முதலமைச்சரிடம் மனநலம் மற்றும் மன ஆரோக்கியம் குறித்த கேள்வியை மட்டும் கேட்கவில்லை. தமிழக மாணவர்கள் படிப்பில் சிறப்பாக இருந்தாலும் வேலைவாய்ப்புக்காக பெங்களூருக்கு செல்ல வேண்டிய நிலை, கர்நாடகா தமிழ்நாட்டைப் பொருளாதாரத்தில் முந்திச் செல்வது, தமிழ்நாட்டில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பின்னர் வெளியேறுவது (எ.கா. ஏத்தர் மின்சார வாகன நிறுவனம்), ஜி.டி.பி. உயர்வு உண்மையா, செயற்கை நுண்ணறிவு தொடர்பான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கேள்விகளையும் எழுப்பினேன்.

ஆனால், அவை எதுவும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. என்னுடன் வந்த Simply Waste சேனல் கபிலன் என்ற யூடியூபர் பெண்கள் பாதுகாப்பு, கற்பழிப்பு தடுப்பு தொடர்பான கேள்வியை கேட்கக் காத்திருந்தார். ஆனால் அவரை எந்தக் கேள்வியும் கேட்க அனுமதிக்கவில்லை” என்றும் நந்தா கூறினார்.

“நான் எந்தக் கட்சிக்கும், தனிநபர் நம்பிக்கைக்கும், மதத்துக்கும் ஆதரவாகவோ எதிராகவோ பேசுவதில்லை. ஆனால் ‘எந்தக் கேள்வியையும் கேட்கலாம்’ என்ற நம்பிக்கையில் தான் சென்றேன்.

சூழ்நிலை காரணமாக அகப்பட்டுக் கொண்டேன்” என்று விளக்கமளித்த நந்தா, தான் DMK-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறப்படுவதை மறுத்தார். அங்கு சென்ற பிறகு தான் அந்த நிகழ்ச்சியின் தலைப்பு "தலைவனே 2.0" என்பதே எங்களுக்கு தெரியும் எனவும், “நான் A2D அல்ல, Adimai 2DMK என்று விமர்சிப்பவர்களுக்கு இது எனது தெளிவான பதில்” என்றும் அவர் தெரிவித்தார்.

நான் சொல்வதை நம்ப முடியவில்லை என்றால், மேடையில் நாங்கள் நானும், கபிலனும் எப்படி ஓரமாக நிற்கிறோம் என பாருங்கள். அங்கிருந்தவர்களில் நாங்கள் மட்டும் Odd one Out போல தனித்து விடப்பட்டோம் என கூறியுள்ளார்.

அதே நேரம் நான் முதல்வர் ஸ்டாலின் மீதும் குற்றம் சொல்லவில்லை. அவருக்கு இது இப்படி ஒரு நிகழ்ச்சி தான் என்று தெரியுமா? அவரை என்ன சொல்லி அழைத்து வந்தார்கள்? என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் நான் யாரையும் வில்லனாக சித்தரிக்கவில்லை.

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டது அந்த நிறுவனம். அது அவர்களுடைய விருப்பம். ஆனால், அவர்கள் எங்களை அழைத்த விதமும் அங்கு சென்ற பிறகு நடந்து கொண்ட விதமும் தான் தவறு. அதை தவிர இங்கு நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார் A2D நந்தா.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பலரும் நந்தாவின் விளக்கத்தை ஆதரிப்பதாகவும், சிலர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கேள்வி எழுப்புவதாகவும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.

அதே நேரம், A2D நந்தாவுக்கு நடந்தது கொடூரம் தான். ஆனால், இவர் இதை நிகழ்ச்சி முடிந்த உடனே வீடியோவில் சொல்லி இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பே சொல்லி இருக்க வேண்டும். இவர் செய்தது தவறு என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ‘தலைவனே 2.0’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யூடியூப் சேனல் அல்லது அரசு தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் வெளியாகவில்லை.

Summary in English : In a recent video, YouTuber A2D Nanda clarified his role in the Thalaivan 2.0 event featuring Chief Minister Stalin. He said organizers first invited open questions but later provided a fixed list. Nanda claimed he tried to exit but security asked him to stay inside. He raised several policy and development topics, though only one was broadcast.