சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் முழுமையாகக் கசிந்துள்ள சம்பவம் தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக தள்ளிப்போன நிலையில், கடந்த வியாழக்கிழமை 5 நிமிடக் காட்சிகள் கசிந்ததைத் தொடர்ந்து 3 மணி நேர முழு திரைப்படமும் இணையத்தில் லீக் ஆனது.

பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்த இந்தப் படம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.
சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்றம் வரை சென்ற படக்குழு, தற்போது படத்தை வெளியிட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இந்த லீக் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் தனஞ்சயன் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். “படம் இடையகத்தில் லீக் ஆகிவிட்டதாக வரும் தகவல்கள் கவலைக்குரிய ஒன்று. இது கோபத்தை ஏற்படுத்தும் செயல். இதைச் செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
கேவிஎன் நிறுவனம் உடனடியாக நீதிமன்றத்தை அணுகி லீக் செய்யப்பட்ட அனைத்து லிங்குகளையும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைவரும் படத்தைப் பார்த்து விடுவார்கள். விஜயின் கடைசி படத்தை எவ்வளவுதான் டார்கெட் செய்வீர்கள்” எனக் குறிப்பிட்டார்.
மற்றொரு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆக்ரோஷமாகப் பதிவிட்டார். “இயக்குநரின் உழைப்பு, பலரின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கிறது. இது திரைவுலகில் நடக்கக்கூடாத குற்றச்செயல்.
யாரோ ஒருவரின் உழைப்பு, காசு, பணத்தில் திருடுபவர்கள் சப்பு கொட்டிக் கொள்வதை விடவே கூடாது. யார் இந்த வேலையைச் செய்தது எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். திரை உலகில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய திருட்டு கலைகள்” எனத் தெரிவித்தார்.
நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், “இதயம் நொருங்கும் அளவுக்கு வருத்தமளிக்கிறது. இது அநியாயமானது. குழுவின் உழைப்பும் ஆர்வமும் இதுபோல வீணாகிப் போவது வேதனை அளிக்கிறது.
தயவுசெய்து இந்தப் படத்தை இங்கே பார்க்கவோ பகிரவோ அல்லது விவாதிக்கவோ வேண்டாம். அவர்களின் உழைப்பை மதிக்கவும். என் நண்பர்களுக்கு உருதுணையாக நான் நிற்கிறேன். இந்தச் செயலை கடுமையாகக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது” எனப் பதிவிட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயன், “ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் பேரார்வம், இரத்தம் மற்றும் வியர்வையால் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டு பிரதிகளைத் தவிர்க்கவும்.
திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து திரையரங்குகளில் பார்க்கவும். இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையானவர்களை மதியுங்கள், கடின உழைப்பை மதியுங்கள், இந்தத் துறையை மதியுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.
‘நிசப்டன்’ பட இயக்குநர் மைக்கேல் அருண் இந்த லீக்கைப் பற்றி பரபரப்பாகப் பதிவிட்டார். “இது தணிக்கை குழுவிடம் வழங்கப்பட்ட பிரதி கிடையாது. எடிட் ரெபரன்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால் இது படக்குழுவில் உள்ள மிக முக்கியமான நபர்களின் தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
முதலில் இது பைரசி கிடையாது. படக்குழுவின் அஜாக்கிரதைதான். அந்த டேட் அவுட்புட் வைத்து விசாரித்து ட்ரையல் செய்யலாம். குற்றவாளியைக் கண்டுபிடிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இந்தச் சம்பவத்தை தமிழ் சினிமா துறைக்கு மிகப் பெரிய நஷ்டம் என வர்ணித்தார். “இந்த ஆண்டு எதிர்பார்த்த திரைப்படங்களில் இந்தப் படம் தான் நம்பர் ஒன்.
350-400 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் இப்படி லீக் ஆனது படத்தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய நஷ்டம். தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து அவரது நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
இயக்குநர் எச். வினோத், “வெளியீட்டுக்கு முன்பே ஜனநாயகன் படம் கசிவது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்து செல்கிறது. திரைப்படத்தைப் பகிராமல் ஆதரவு தாருங்கள்” என வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
கேபிஎன் ப்ரொடக்ஷன்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வெளியிட்ட அறிக்கையில், “கசிந்த காட்சிகளை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், யூடியூப், டோரண்ட் உள்ளிட்ட எந்த டிஜிட்டல் ஊடகத்திலும் பதிவிறக்கம் செய்வது, பகிர்வது, பதிவேற்றுவது கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறல்.
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள். ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என எச்சரித்துள்ளார்.
இதனிடையே, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்னாள் தலைவரும் இயக்குநருமான கே.ஆர். (கேஆர் போலீஸ்) டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
“500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் சென்சார் சிக்கல்களால் இன்னும் சான்றிதழ் பெற முடியவில்லை. இந்நிலையில் படம் இணையத்தில் கசிந்து பல்லாயிரக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்க்கின்றனர்.
காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பகிரப்படுவதைத் தடுக்க வேண்டும். திருட்டுத்தனமாக வெளியிட்டவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்” எனப் புகாரில் கோரியுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழ் சினிமா துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. படக்குழு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary : Film Jananayagan, directed by H. Vinoth and starring Vijay, has leaked online in full. The movie was scheduled for release after elections but faced censor issues. Producers, actors including Suriya and Sivakarthikeyan, and industry members have condemned the incident and requested legal action to remove the links and support theatrical release.

