கண்ணை மறைத்த காதல்.. கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த பெண் பகீர் பின்னணி

பெங்களூரு : பெங்களூரு புறநகரில் உள்ள பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் தொழிற்சாலையின் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் இரத்தக் கரையுடன் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 19 வயது பெண் ஊழியர் ரேணுகா என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடம் பெங்களூரு அருகே தேவநகரி தாலுகா, விஸ்வநாதபுரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பீர சந்திரா பகுதியில் அமைந்துள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலை. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று அதிகாலை நேரத்தில் தொழிற்சாலையின் பெண்கள் கழிவறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இரத்தக் கறை படிந்த நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடைத்தது. உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் விஸ்வநாதபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சம்பவத்துக்கு சில நிமிடங்கள் முன்பு ஒரு பெண் ஊழியர் கழிவறைக்கு சென்று வந்தது பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் அந்தப் பெண்ணை உடனடியாக அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அந்தப் பெண் ரேணுகா (19) என்பது தெரியவந்தது. அவர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகவும், ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், அதன் விளைவாக கர்ப்பமடைந்ததாகவும் ஒப்புக்கொண்டார். முழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் வேலையைத் தொடர்ந்து வந்துள்ளார்.

திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் கழிவறைக்கு சென்று குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், பிறந்த உடனேயே பதற்றத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, எதுவும் தெரியாதவள் போல் வேலைக்குத் திரும்பியதாகவும் ரேணுகா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் உடனடியாக ரேணுகாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஸ்வநாதபுரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைக்கு தந்தை யார் என்பது குறித்து ரேணுகாவிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த நபரையும் விரைவில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஒரு பெரிய தொழிற்சாலை வளாகத்துக்குள் இத்தகைய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் பீதியும், பெண் ஊழியர்கள் மத்தியில் கவலையும் ஏற்பட்டுள்ளது.

போலீசார் மேலும் தொழிற்சாலை நிர்வாகத்திடம் இருந்து தகவல்களைப் பெற்று விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.

Summary in English : A 19-year-old woman working at a Foxconn factory near Bengaluru gave birth in the factory toilet. The newborn was later found in the dustbin. She was taken to hospital for medical care. Police are investigating the matter after reviewing CCTV footage and questioning her. The woman had been in a relationship and was pregnant.