சேலம், ஏப்ரல் 18 : தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக ஆட்சியை நேரடியாக விமர்சித்துப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே அவர், “எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருக்கிறது.

இதைத் தவிர அண்ணன் ஸ்டாலின் மீது வேறு என்ன குற்றச்சாட்டு சொல்ல முடியும்?” என்று கூறினார். இந்தப் பேச்சு திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பூங்காவில் இருந்து சேலம் கோட்டை மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், மக்களிடம் வாக்கு சேகரித்த பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசினார். “தமிழகம் முழுவதும் ஒரே ஒரு குற்றச்சாட்டுதான் அண்ணன் மீது இருக்கிறது.
அது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் போதைப் பொருள் கலாச்சாரம்” என அவர் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகள் பிரேமலதாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றன. “பிரேமலதா இப்போதும் அதிமுக கூட்டணியில் இருப்பது போலவே பேசுகிறார். அவரது செயல்கள் எல்லாம் NDA கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுக்கின்றன. அவருக்கு நன்றி” என அதிமுக தரப்பினர் கூறி வருகின்றனர்.
இணையவாசிகள் இந்தப் பேச்சை “துரந்தர்” திரைப்பட உதாரணத்துடன் ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர். “பாகிஸ்தான் உளவாளியாகச் சென்று தீவிரவாதிகளைத் தீர்த்துக்கட்டுவது போல, பிரேமலதா திமுகவுக்குள் நுழைந்து திமுகவைத் தீர்த்துக்கட்ட முயற்சி செய்கிறார்.
இவர் ஒரு "லேடி துரந்தர்" என சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர். சிலர் அவரை “ஈபிஎஸ்-இன் ஸ்லீப்பர் செல்” எனக் கூறி விமர்சித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மேலும் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் நிச்சயமாக முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என யாரும் பேசவில்லை” என அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையில் உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறும் நோக்கத்துக்காக மட்டுமே என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே பிரேமலதா தீபம் ஏற்றப்படும் எனக் கூறியது, திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். “சிறுபான்மையினர் ஓட்டுக்கு வேட்டு வைத்த கதையாக மாறியுள்ளது” என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் இந்தத் தொடர் பேச்சுகள் திமுக கூட்டணியில் உள்ள சலசலப்பை அதிகரித்துள்ளன. திமுக தரப்போ அல்லது தேமுதிக தரப்போ இதுபற்றி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
Summary in English : Premalatha Vijayakanth, leader of DMDK in DMK alliance, spoke during Salem campaign walk and public meeting. She stated that the main issues in the state are challenges related to women safety and drug culture. Opposition parties appreciated her remarks. In Thiruparankundram, she announced support for lighting the traditional lamp at the hill site. This has drawn attention from various political groups.

