சென்னை, ஏப்ரல் 9: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் நடத்தும் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பல இடங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் குவிவதால், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் அல்லது அசம்பாவிதம் நிகழலாம் என்ற அச்சத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதுகுறித்து கடும் விமர்சனம் செய்துள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அவர், “விஜயின் கூட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அரசியல் களத்தில் அவருக்கான இடத்தையும், அடிப்படை உரிமையையும் யாராலும் மறுக்க முடியாது” என்றார்.
மேலும், “இப்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா அல்லது பழைய திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்த சந்தேகத்தை போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை” என்று வலியுறுத்தினார்.
விஜய் நடிகராகவோ அல்லது சாதாரண மனிதராகவோ யாராக இருந்தாலும், அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். மக்கள் மத்தியில் தனது கொள்கைகளை எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.
அப்படிப்பட்டவருக்கு “கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க முடியாது, அசம்பாவிதம் ஏற்படும்” என்ற காரணங்களைச் சொல்லி அனுமதி மறுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
“எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் தற்போதைய காவல்துறை இருக்கிறது என்பது உண்மையானால், அதை மக்கள் உணரும் வகையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது நடக்கும் காவல்துறையின் நடவடிக்கைகளைப் பார்த்தால், திமுகவின் கட்டுப்பாட்டில் தான் இன்னமும் காவல்துறை இருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது” என்று அவர் கூறினார்.
நடிகர் விஜய்க்கு ஆதரவாக அண்ணாமலை வெளியிட்ட இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே இந்த விவகாரம் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
Summary in English : Actor Vijay's political campaign meetings are being denied permission in several places due to large crowds and police resource concerns. Former BJP Tamil Nadu president Annamalai criticized this, stating that every political party and leader has the basic right to campaign.
He questioned whether the police are under Election Commission control or still influenced by the previous DMK government. He urged the Election Commission to act impartially without bias.


