மும்பை நகரில் பிரபல யூடியூபரான ராகுல் ஷர்மா தனது வீட்டின் ஹோம் டூர் வீடியோவை பதிவு செய்து தனது சேனலில் வெளியிட்டார். நவீன வசதிகள் நிறைந்த அவரது அழகான வீட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக காட்டிய அந்த வீடியோவில், மொட்டை மாடியில் இருந்த ஒரு கதவைப் பற்றியும் சொல்லாமல் இல்லை.
“இந்தக் கதவின் தாழ்ப்பாள் கொஞ்சம் வீக்காக இருக்கிறது. சற்று வேகமாக அழுத்தினால் திறந்து விடும். பூட்டியிருந்தாலும் சில சமயங்களில் திறக்கக்கூடும். இதை சீக்கிரம் சரி செய்ய வேண்டும்,” என்று போகிற போக்கில் குறிப்பிட்டுவிட்டு வீடியோவைத் தொடர்ந்தார் ராகுல்.

இந்த வீடியோவை உற்று நோக்கிய அவரது ஒரு சப்ஸ்கிரைபர் வினோத் பாட்டீல், அந்தக் கதவின் பலவீனத்தை கவனித்துக்கொண்டார். உடனடியாக அவரது மனதில் ஒரு தவறான எண்ணம் உருவானது.
“இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீட்டுக்குள் நுழைந்து சில பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்” என்று திட்டமிட்ட வினோத், ஒரு நாள் மாலை ராகுலின் வீட்டுக்கு அருகில் இருந்த புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் வழியாக மொட்டை மாடிக்கு தாவி வந்தார்.
வீடியோவில் பார்த்தது போலவே, பூட்டியிருந்த அந்தக் கதவை சற்று அழுத்தினார். கதவு உடனே திறந்தது. உள்ளே நுழைந்த வினோத், வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்து எதையாவது எடுத்துச் செல்லலாம் என்று முயற்சி செய்தார். ஆனால், வெளியே எப்படி தப்பிப்பது என்பதற்கான எந்தத் திட்டமும் அவரிடம் இல்லை.
அதே நேரத்தில், அருகிலுள்ள கட்டிடத்தில் வேலையாட்கள் வேலை செய்ய வந்துவிட்டனர். திரும்பிச் செல்லும் வழி முழுவதும் மூடப்பட்டது.
அதிர்ச்சியடைந்த வினோத், வீட்டுக்குள் எங்காவது பதுங்கி இருக்க முயன்றார். ஆனால், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் லட்சுமி அவரைப் பார்த்துவிட்டு பயங்கரமாக கூச்சலிட்டார்.
“யாரது? யாரு அங்கே?” என்ற அலறல் கேட்டு வீட்டில் இருந்த அனைவரும் ஓடி வந்தனர். மாடிப்படியில் சிக்கிக்கொண்ட வினோத், வசமாக மாட்டிக்கொண்டார்.
உடனடியாக மண்டியிட்ட வினோத், “நான் விளையாட்டுக்காக இதைச் செய்தேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இப்படி செய்யமாட்டேன்” என்று கெஞ்சினார்.
ராகுல் ஷர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் அவருக்கு சாப்பாடு கொடுத்து வயிறு நிரப்பினர். பின்னர் உடனடியாக மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து வினோத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் மும்பை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் வீடியோக்களில் தனிப்பட்ட வீட்டு விவரங்களைப் பகிரும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
சிறிய அலட்சியம் பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கை.
காவல்துறை விசாரணை தொடர்கிறது. மேலும் விவரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
English Summary : A popular Mumbai YouTuber shared a home tour video highlighting his house features, including a faulty terrace door. One subscriber noticed it and attempted to enter the home. He got trapped inside after construction workers arrived at the nearby site. The house staff spotted him, leading to his immediate arrest by police. The incident created buzz in the city.