இந்த ரேஷன் அட்டைக்கு மட்டும் தான் மாதம் 1000 ரூபாய் – புது ட்விஸ்ட்டு..!

குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கடந்த பட்ஜெட்டிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதை எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்த நிலையில், கண்டிப்பாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பிரசாரத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறினார்.

மகளிர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும்? யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. PHH என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், PHHAAY என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று தெரிகிறது. அதேபோல், வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றையும் கணக்கிடப்படும் என்று சொல்லப்படுகிறது. அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.

புதுமைப்பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளின் தாயாருக்கு இந்த திட்டத்தில் பயன் பெற தடை இருக்காது. மகளிருக்கான உரிமைத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. அதாவது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

   

--Advertisement--