பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் தொடரில் (Celebrity Women Cricket Tournament) பங்கேற்ற ஒரு கன்னட தொலைக்காட்சி நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு பெண்களின் பாதுகாப்பு குறித்த கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவின் கோரமங்களா இன்டோர் ஸ்டேடியத்தில் (Koramangala Indoor Stadium) நட்சத்திர பெண்கள் கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சினிமா, தொலைக்காட்சி துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், ரியாலிட்டி ஷோ போட்டியாளர்கள், சமூக வலைதள நட்சத்திரங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
இத்தொடரில் கங்கா கிளாடியேட்டர்ஸ், காவேரி குயின்ஸ், ஏஞ்சல்ஸ், டோலிவுட் டைனமோ யமுனா யோதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நதிகளின் பெயர்களைத் தாங்கிய 10 அணிகள் பங்கேற்றன.
மூன்று நாட்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான தொடரின் இறுதிப்போட்டியில் ஷராவதி சக்திஸ் (Sharavathi Shaktis) அணி அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற 32 வயதான கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை), ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர். போட்டியின் இரண்டாவது நாளான பிப்ரவரி 7 அன்று, அவர் மைதானத்தில் உள்ள பெண்களுக்கான கழிவறைக்குச் சென்றிருந்தார். அப்போது, அவருக்குத் தெரியாமல் ஒரு மர்ம நபர் அவரது அந்தரங்க தருணங்களை செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இந்த ஆபாச வீடியோவை மர்ம நபர் இன்ஸ்டாகிராம் மூலம் நடிகையின் தோழியின் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். "இது நடிகையின் கணக்கு" என்று தவறாக நினைத்து, தோழி மூலம் நடிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
"இன்னும் பல அந்தரங்க வீடியோக்கள் எங்களிடம் உள்ளன. வீடியோ கால் மூலம் பேச வேண்டும் அல்லது பெரும் தொகை பணம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்" என்று மிரட்டப்பட்டது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை, பிப்ரவரி 13 அன்று பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மிரட்டல் செய்திகள், புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் பெண்ரைவ் மூலம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து (FIR) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மிரட்டியவர் யார்? இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்குபவர் யார்? வீடியோ எடுத்தவர் மைதான ஊழியரா அல்லது வெளியாட்களா? என பல கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம், பிரபலங்கள் கலந்து கொள்ளும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் பெண்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொது இடங்களில், குறிப்பாக பெண்களுக்கான கழிவறைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Summary in English : A Kannada TV actress who participated in the February 2025 Celebrity Women’s Cricket Tournament in Bengaluru faced privacy violation when an unauthorized video from the stadium restroom was recorded and used to send extortion messages via Instagram to her friend. She filed a complaint with Bengaluru Cyber Crime Police on February 13, who registered a case and are investigating.

