தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த ரஷ்யாவில் வேலை செய்து வந்த 51 வயது சூரையா, தனது மனைவியை தாக்கியதாக கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூரையா முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம் இருப்பதால், மனைவியின் நடத்தையை கண்காணிக்கும் வகையில் வீட்டின் ஹால் மற்றும் பெட்ரூம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இதன் மூலம் ரஷ்யாவிலிருந்து மனைவியை தொலைத்தொடர்பு வழியாக கண்காணித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மனைவியின் சகோதரி குழந்தைக்கு காது குத்து விழா இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மனைவி வீட்டிலிருந்து கிளம்பும் போது, திடீரென வீட்டுக்கு வந்த சூரையா மனைவியிடம் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது அவர்களின் மகள் “கத்தியை கீழே போடுங்கப்பா” என தொடர்ந்து கூறியும், ஒரு கட்டத்தில் சூரையா இரு குழந்தைகளின் கண் முன்னே மனைவியின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்து கீழே தள்ளி தாக்கினார்.
இதனால் மனைவி நிலை தடுமாறி கீழே விழுந்து எழ முடியாமல் தவித்தார். இந்த சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த கேமரா பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு மனைவி தரப்பு போலீசில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் சூரையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், புகார் அளித்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில், சூரையாவை அழைத்து விசாரணை நடத்தவில்லை என்று மனைவி தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் மேலும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary : In Thanjavur's Madhakottai Kaveri Nagar area, 51-year-old Suraiya who returned suddenly from Russia had an argument with his wife. In the presence of their two children, he pulled her hair and pushed her down. The incident was recorded on home CCTV cameras. Police filed a case based on the footage, but the wife alleged her husband was not questioned even after two days.