ப்ளீஸ்ங்க.. இன்னைக்கு நைட் வேணாமே? புதுப்பெண்ணின் முதலிரவு கோரிக்கை! காலையில் காத்திருந்த மரண ட்விஸ்ட்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சத்திரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த 29 வயதான ராதாகிருஷ்ணன், காற்றாலை மின் உற்பத்தி கழகத்தில் மெக்கானிக்காகப் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு முன்பே திருமணம் நடைபெற்று மனைவி, ஒரு குழந்தை என குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் ராதாகிருஷ்ணனின் குடிப்பழக்கம் குடும்ப வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. 

மனைவி எத்தனை முறை எச்சரித்தும் அவர் கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

குடும்பம் கலைந்த நிலையில் தனது வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை சீர்படுத்திக் கொள்ள விரும்பிய ராதாகிருஷ்ணன், இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். 

ஒரு புரோக்கர் மூலம் கேரளாவில் பெண் பார்க்கச் சொன்னார். கேரளாவைச் சேர்ந்த அந்தப் புரோக்கர், “திருமணம் செய்து தர வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாய் கமிஷன் தர வேண்டும்” என்று கூறினார். ராதாகிருஷ்ணன் அதற்கு சம்மதித்தார்.

பின்னர், கேரளா கொழுஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்ப்பதற்காக ராதாகிருஷ்ணன் தன் வீட்டாருடன் சென்றார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அந்தப் பெண்ணைக் காட்டினர்.

ராதாகிருஷ்ணனின் பெற்றோர், “எங்களைப் பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல் ஏன் கோவிலில் மட்டும் காட்டினீர்கள்?” என்று கேட்டபோது, பெண் தரப்பினர், “நாங்கள் புதிதாக வீடு கட்டி வருகிறோம். தற்போது உறவினர் வீட்டில் வசிக்கிறோம். திருமணம் முடிந்த பிறகு உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வோம்” என்று கூறினர். இதனால் இரு தரப்பினரும் சம்மதித்தனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள அமலலிங்கேஸ்வரர் கோவிலில், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பெண் வீட்டாரில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும், தாராபுரம் அருகே சத்திரத்தில் ராதாகிருஷ்ணன் வீட்டில் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்று இரவு, புதுமணப்பெண் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகக் கூறி, “மற்றொரு முறை சாந்தி முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். அடுத்த நாள், பெண் வீட்டார் ராதாகிருஷ்ணனையும் புதுமணப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு கேரளா கொழுஞ்சாம்பாறை நோக்கி புறப்பட்டனர்.

வழியில் “அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை” என்று கூறி, பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு வெளியே ராதாகிருஷ்ணனை நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்ற பெண் வீட்டாரும் புதுமணப்பெண்ணும் நீண்ட நேரம் வரவில்லை. 

கவலையும் குழப்பமும் அடைந்த ராதாகிருஷ்ணன் உள்ளே சென்று தேடியபோது, அங்கு யாரும் இல்லை. அவர்கள் மாயமாக மறைந்து விட்டனர்.

உடனே தன் வீட்டாருக்கு தகவல் கொடுத்த ராதாகிருஷ்ணன், போலீசில் புகார் அளித்தார். விசாரணை தீவிரமடைந்தது. அதிர்ச்சிகரமான உண்மை வெளிப்பட்டது.

அந்தப் ‘பெண்’ ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. அவரது கணவர்தான் திருமண புரோக்கர்! அவர்கள் பணத்திற்காக இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ராதாகிருஷ்ணனிடம் 1 லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷன், தாலி, மூக்குத்தி, தோடுகள் உள்ளிட்ட நகைகளைப் பெற்று, தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். போலீஸ் சிக்காமல் இருக்க பெயர்களை மாற்றியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இந்தச் சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையைப் பறிப்பதற்காக இந்தப் புரோக்கர் தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தற்போது காவல்துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ராதாகிருஷ்ணன் போன்று பலர் இந்தக் கும்பலுக்கு பலியாகியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளூரில் எழுந்துள்ளது.

English Summary : A 29-year-old mechanic from Dharapuram, separated from his first wife, arranged a second marriage through a Kerala broker. The wedding took place at a temple near Udumalpet. Soon after, the bride and her relatives disappeared while visiting a hospital in Pollachi. Investigation showed the woman was already married and her husband was the broker. They took money and jewellery before vanishing. Police are searching for them and checking for similar cases.