திருமணமான பெண்களை இயற்கை முறையில் கர்ப்பமாக்க லட்சங்களில் சம்பளம்! எங்கே? எப்படி?

புதுச்சேரி : திருமணமான பெண்களை இயற்கை முறையில் கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் சம்பளம் மற்றும் ரூ.2 லட்சம் முன்பணம் என்று ஆசை காட்டி, ராஜா தெருவில் உள்ள ஒரு விடுதி மேலாளரை ஏமாற்றிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டாக்டர் விக்னேஷ்’ என அறிமுகமான மர்ம நபர் இந்த மோசடியைச் செய்துள்ளார்.

ராஜா தெருவில் உள்ள ஒரு விடுதியின் மேலாளரான ராமசாமி என்பவரிடம் தொடர்புகொண்ட ‘டாக்டர் விக்னேஷ்’ என்ற நபர், “செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு வரும் பல தம்பதிகளுக்கு கணவனால் குழந்தை பாக்கியம் இல்லை.

அதனால் அவர்கள் இயற்கையான உறவு மூலம் கருத்தரிப்பதை விரும்புகின்றனர். கணவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து, திடகாத்திரமான ஆண்களைத் தேர்வு செய்கின்றனர்.

உங்களைப் போன்றவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். இது முழுக்க முழுக்க ரகசியமாகவும், கணவரின் முழு சம்மதத்துடனும் நடைபெறும். எந்த சட்ட விரோதமும் இல்லை” என்று உளவியல் ரீதியாக தந்திரமாக பேசி நம்பவைத்துள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ராமசாமி, ‘பதிவு கட்டணம்’ என்ற பெயரில் ரூ.49,500-ஐ ஒரு மர்ம நபரின் QR கோடுக்கு அனுப்பியுள்ளார். மீதமுள்ள ரூ.500-க்கு விடுதி உரிமையாளரிடம் உதவி கோரியபோதுதான் உண்மை வெளியானது. உரிமையாளர் அந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட ராமசாமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடிக் கும்பல் பணம் மட்டும் பறிப்பதோடு நில்லாமல், “ரகசியம் காக்கப்படும், யாருக்கும் சந்தேகம் வராது” என்று உளவியல் பிம்பத்தை உருவாக்கி தயக்கத்தை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. “ரகசிய வேலை, டோனர் வேலை எனக் கூறி முன்பணம் கேட்கும் 99% அழைப்புகளும் மோசடிதான். பேராசைப்பட்டு பணத்தை இழக்க வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக போலீசாரைத் தொடர்புகொள்ளுங்கள்” என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சம்பவம் புதுச்சேரியில் பலரிடையே ‘இப்படியெல்லாம் மோசடி செய்வார்களா?’ என்ற அதிர்ச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary in English : In Puducherry, a lodge manager was deceived by a person claiming to be Dr Vignesh with an offer of a high-paying fertility donor position. The manager transferred Rs 49,500 as registration fee via QR code. When the contact number was switched off, the fraud came to light. Police have registered a case and are investigating.