Posts

Showing posts from November, 2018

இறுதி நேரத்தில் 2.0 படத்திற்கு வந்த சிக்கல் - ரிலீஸ் தேதி மாற்றம்..?

Image
சர்கார் படத்தின் ரிலீஸின்போது அதற்கு பலவிதங்களில் சிக்கல் வந்தது. அதுபோல தற்போது ஷங்கரின் 2.0 படத்திற்கும் சிக்கல் ஆரம்பித்துள்ளது. படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில் தற்போது Cellular Operators Association of India (COAI) படத்தின் மீது புகார் கூறியுள்ளது. மொபைல் மற்றும் செல்போன் டவர் மிக ஆபத்தானது என போலியான விஷயத்தை மக்கள் மத்தியில் பரப்புகிறது என கூறி படத்தை தடை செய்யச்சொல்லி Ministry of Information & Broadcastingக்கு அவர்கள் புகார் அனுப்பியுள்ளனர். மேலும் சென்சார் போர்டு 2.0 படத்திற்கு அளித்துள்ள சென்சார் சான்றிதழை உடனே ரத்து செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த பிரச்சனை பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனவும் இதனால் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறிகிறார்கள். படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் படம் நிச்சயம் நாளை (நவ 29) அன்று வெளியாகும் எனவே கூறுகிறார்கள்.

கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி : பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு ?

Image
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. ஐரோப்பிய சந்தையில் Brent கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5 சதவிகிதம் குறைந்து 59 டாலராக இருந்தது. சமீப ஆண்டுகளில் கச்சா எண்ணெய் ஒரே நாளில் இவ்வளவு அதிக விலை வீழ்ச்சியை சந்தித்திருப்பது இதுவே முதல் முறை. கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ள அதே வேளையில் அதை பயன்படுத்தும் அளவுக்கு பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இருக்காது என வெளியான தகவல்களே விலை வீழ்ச்சிக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% வீழ்ச்சியடைந்ததால் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து அதன் விலை வீழ்ச்சியை கட்டுக்குள் வைப்பது குறித்து ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் டிசம்பர் 6-ம் தேதி முடிவு செய்ய உள்ளது. அதுவரை விலை வீழ்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து அதிகரி...

வரலாற்று சாதனை படைத்தார் குத்துச்சண்டை வீரர் மேரி கோம்

Image
உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் 6வது முறையாக தங்கப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மேரி கோம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் 5:0 என்ற கணக்கில் உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை மேரி கோம் வீழ்த்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 35 வயதான மேரி கோம் 8 வருடங்களுக்கு பின் மீண்டும் பதக்கத்தை கையில் ஏந்தியுள்ளார். உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டையில் கடைசியாக மேரி கோம் பதக்கம் வென்றது 2010-ஆம் ஆண்டில்தான். கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் ஆடிவரும் மேரி கோம், இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை வென்றிருந்தார். இந்த நிலையில் 6வது தங்கம் உட்பட தற்போது 7-வது பதக்கத்தை வென்றுள்ளார். உலக மகளிர் குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு மேரி கோம் நன்றி தெரிவித்துள்ளார். “கடந்த சில ஆண்டுகளாக போட்டிகளில் சரியாக திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய எடைப்பிரிவு மாறியது சவாலாக இருந்தது. இன்று நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்றார் மேரி கோம்.

“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்

Image
அமேசான் நிறுவனத்திற்கு எதிராக அதில் பணிபுரியும் ஊழியர்கள் ஐரோப்பா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பெரிதாக வளர்ந்து வரும் டெக்னாலஜிக்கு ஏற்ப உலகமும் வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் ஷாப்பிங் என நாகரிக உலகம் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் என ஏராளமான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் நாள்தோறும் தோன்றிக் கொண்டே இருக்கிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் போதும் தள்ளுபடியை போட்டி போட்டுக் கொண்டு தருகிறார்கள். எப்படி இவ்வளவும் குறைவான விலையில் பொருட்கள் கிடைக்கிறது என ஆச்சர்யமாக இருக்கும். இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ஆன் லைன் வர்த்தகத்தில் தற்போது உச்சத்தில் உள்ளது. யாரும் செல்ல முடியாத இடங்களிலும் சென்று பொருட்களை வழங்கி வருகிறார்கள். அதற்கேற்றார்கள் மற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள். தனக்கென உலகின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்கள். நகரங்களில் திரும்பும் திசையெங்கும் அமேசான் போன்ற நிறுவனங்களில...

கட்டாயத்தில் நிறுவனங்கள்... விரைவில் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையேற்றம்!

Image
ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலையேற்றம் விழாக்காலத்தை முன்னிட்டு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க வரி அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணங்களால் வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பு செலவு அதிகரித்து லாபம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இழப்பை சரிசெய்ய வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பெரும்பாலான நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது பானாசோனிக் நிறுவனம் தயாரிப்புகளின் விலையை 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்தியப்பிரிவு சிஇஓ மணிஷ், இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக நிறுவன தயாரிப்புகளின் செலவீனம் அதிகரித்துள்ளது. இதனை சரிகட்ட விலையை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். விலை உயர்வு திட்டம் குறித்து பேசியுள்ள ஹயர் நிறுவன இந்திய தல...

“சின்மயி முருகா என்றாலும் மீடூ என கேட்கிறது” - ராதாரவி கடும் தாக்கு

Image
டப்பிங் சங்கம் குறித்து சின்மயி கூறிய அனைத்து புகார்களும் பொய் என நடிகரும், டப்பிங் சங்கத் தலைவருமான ராதாரவி தெரிவித்துள்ளார். கேள்வி : டப்பிங் சங்கத்தில் சந்தா செலுத்தியுள்ளேன் என சின்மயி ஆதாரத்துடன் கூறியுள்ளாரே.! அவர் நீக்கப்பட்டதன் முழுப்பின்னணி என்ன? பதில் : அவங்க தான் கோர்ட்டுக்கு போறேன் என்று சொல்லுயிருக்கிறார்களே.. கோர்ட்டில் பார்ப்போம் என்று சுருக்கமாக கூறி அந்த விஷயத்தை முடிக்க இயலும். சின்மயி வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் மீது குற்றச்சாட்டை வைத்து, பிளாக் மெயில் செய்து பார்த்தார். அங்கு ஒன்னும் முடியல. உடனே அவர் டப்பிங் சங்கம் பக்கம் திரும்பியுள்ளார். சின்மயி முருகா என்று கூறினால் கூட, மீ டூ தான் நினைவிற்கு வருகிறது. சின்மயியை நாங்கள் நீக்கவில்லை. அவரை நீக்கியது நீதிபதி வாசுகியம்மாள். அவர்தான் தேர்தல் ஆணையர். 2 வருட சந்தா கட்டவில்லை என நீக்கினார். அதேபோல் நீக்கிய பிறகு சின்மயி டப்பிங் சங்கம் குறித்து பேசக்கூடாது. கேள்வி : ஆனால் சின்மயி தான் வாழ்நாள் உறுப்பினர் எனக் கூறுகிறாரே? பதில் : வாழ்நாள் உறுப்பினர் என்றெல்லாம் இல்லை. சின்மயி ரூ.15 ஆயிரம் கட்டியுள்ளார். அ...

“96” படத்தின் சொல்ல மறந்த கதை : நாளை மாலை வெளியீடு

Image
விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த ‘96’ படம் வெளியாகி, வெற்றி பெற்று, அது டிவி-யிலேயே ஒளிபரப்பப்பட்ட பின்னரும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை எனலாம். ஏனென்றால் அந்தப் படத்தின் கதை அம்சம் அப்படி. இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் தங்கள் பள்ளி வாழ்வை கடந்து வந்த யாராலும் இந்த படத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. காரணம் அனைவருக்குள்ளும் ஒரு ‘அழகி’ (பார்த்திபன் திரைப்படம்) அல்லது ஒரு சொல்ல மறந்த (மறைத்த) காதல் கதை இருக்கத்தான் செய்யும். அந்த கதை ஒவ்வொருவரின் வாழ்விலும் நினைத்தாலே இனிக்கும் வசந்த காலமாக அனைவரது மனதிற்குள்ளும் பசுமையாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்திற்கு உயிர் கொடுத்த திரைப்படம் தான் ‘96’. இந்தப் படத்தின் டீஸர் வெளியானது முதல் இன்று வரையிலும் பள்ளிப்பருவ காதலை நினைவூட்டும் நபர்களின் நினைவிற்கு வரும் பாடல் வரி “காதலே காதலே தனிப்பெரும் துணையே” என்பது தான். அந்தப் பாடல் அனைவரது மனதையும் உருக்கிவிட்டது. பள்ளிப் பருவ தோழியை நினைக்கும...

நடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்!

Image
இந்தி நடிகர் ஷாருக் கானுக்கு எதிரான போராட்டத்தை ஒடிசாவின் கலிங்க சேனா அமைப்பி வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து இன்று நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழாவில் அவர் பங்கேற்கிறார். ஷாரூக் கான், கரீனா கபூர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படம், ‘அசோகா’. இந்தப் படத்தில் அஜீத் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் ஒடிசாவில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது. படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடந்ததால், அங்கு படம் திரையிடப்படவில்லை. (ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்) ’அசோகா’ வெளியாகி 17 வருடம் ஆன நிலையில், இப்போது புது பிரச்னை கிளம்பி இருக்கிறது. அந்த படத்தில் கலிங்கப் போரை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் இதன் மூலம் ஒடிசா மக்களின் உணர்வுகளை பாதித்துவிட்டதாகவும் கலிங்க சேனா என்ற அமைப்பு புகார் கூறியுள்ளது. இது தொடர்பாக இதன் தலைவர் ஹேமந்த ராத் கடந்த 1 ஆம் தேதி போலீசில் புகாரும் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஒடிசாவில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. இதை காண வருமாறு நடிகர் ஷாரூக் கானுக்கு ஒடி...

நடிகர் மகேஷ் பாபுக்கு 106 வயதான ரசிகை ! ஒரு நெகிழ்ச்சியூட்டும் சந்திப்பு

Image
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை சந்திக்க அவரது ரசிகையான 106 வயது பாட்டி பல கிலோமீட்டர் பயணம் செய்து வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தெலுங்கு திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. தமிழில் விஜய் போன்று தெலுங்கில் மகேஷ் பாபு என்று சொல்வார்கள். விஜய் நடித்து வெற்றிப் பெற்ற கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீ மேக்குகள் தான். சிறுவர்கள் இளைஞர்கள் என மகேஷ் பாபுவுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால் அவரது ரசிகர் பட்டாளத்தில் 106 வயது பாட்டியும் ஒருவர் இருந்துள்ளார் என்பது மகேஷ் பாபு பகிர்ந்த இன்ஸ்ட்ராகிராம் பதிவில் இருந்து தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த மூதாட்டி, சத்யவதி. 106 வயதான சத்யவதி நடிகர் மகேஷ் பாபுவின் தீவிர ரசிகை. இந்நிலையில் மகேஷ்பாபுவின் நடித்து வரும் மகரிஷி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதனை அறிந்த சத்யவதி தனக்கு பிடித்த நாயகனை பார்க்க பல கிலோமீட்டர் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். தனக்கு இப்படி ஒரு ரசிகை என...

ஹாலிவுட் இயக்குனர் பெர்னார்டோ காலமானார்!

Image
ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இயக்குனர் பெர்னார்டோ பெர்டோலுஸி நேற்று காலமானார். அவருக்கு வயது 77. தி கன்பாமிஸ்ட், லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ், த லாஸ்ட் எம்பரர், லிட்டில் புத்தா, த ட்ரீமர்ஸ், மீ அண்ட் யு உட்பட பல புகழ்பெற்ற படங்க ளை இயக்கியவர் இத்தாலியைச் சேர்ந்த பெர்னார்டோ பெர்டோலுஸி. ’த லாஸ்ட் எம்பரர்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர். சீனாவின் கடைசி ஆட்சியாளர் பு யி-யின் சுயசரிதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருதின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்தப் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியில் சிறந்த படம், சிறந்த இயக்கம் உட்பட 9 விருதுகளை வென்றது. இதன் மூலம் ஆஸ்கர் விருது பெற்ற முதல் மற்றும் ஒரே இத்தாலிய இயக்குனர் என்ற பெயரை பெர்னார்டோ பெற்றார். கேன்சரால் பாதிக்கப் பட்டிருந்த இவர், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். ஐரோப்பிய மற்றும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வந்த இவர் காலமானதை இவரது செய்தி தொடர்பாளர் ஃபிளாவியா ஷியாவி உறுதிப் படுத்தியுள்ளா...

புதிய படத்தில் இணையும் மகத், ஐஸ்வர்யா தத்தா

Image
பிக்பாஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கிய மகத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள். மகத் ராகவேந்திரா பிக்பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக களம் கண்டவர். அதன் பின்பு அவர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது, சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே 3 படம் கைவசம் வைத்துள்ள நிலையில் தற்போது புதுப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் மகத். இந்தப் படத்தில் பிக்பாஸ் சீசன் 2 வில் மற்றொரு போட்டியாளராக களம் கண்டு இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா தத்தா நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தப் படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “வடசென்னையைச் சேர்ந்த இளைஞர் மகத் பணக்காரப் பெண்ணான ஐஸ்வ...

உலக மகளிர் டி 20 லெவன் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்

Image
உலக மகளிர் டி20 அணிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, கோப்பையை நான்காவது முறையாக கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் அடிப்படையில், சர்வதே கிரிக்கெட் கவுன்சில், மகளிர் டி20 உலகக் கோப்பை லெவன் அணியை தேர்வு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட இயான் பிஷப், அஞ்சும் சோப்ரா, எபானி ரெயின்போர்ட் பிரெண்ட், பத்திரிகையாள மெலிண்டா பேரெல்ல, ஐசிசியின் பொதுமேலாளர் ஜியாஃப் அலார்டிஸ் ஆகியோரைக் கொண்ட குழு இதை தேர்வு செய்தது. இந்த அணிக்கு, இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மந்தனா, பூனம் யாதவ் ஆகிய இரண்டு இந்திய வீராங்கனைகளும் தேர்வாகியுள்ளனர். (,மந்தனா) மேலும், 3 இங்கிலாந்து வீராங்கனைகளும் 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகளும் பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் இருந்து தலா ஒரு வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். (பூனம் யாதவ்) அணி விவரம்: ஹர்...

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன்? பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்!

Image
பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட்டின், ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் மஷ்ரஃப் மோர்டாஸா விளக்கம் அளித்துள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஷ்ரஃப் மோர்டாஸா. ஆல் ரவுண்டரான இவர், அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பங்களாதேஷில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் மோர்டாஸாவை களமிறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி முடிவு செய்துள்ளது. இதுபற்றி அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் மஹ்புபுல் அலம் ஹனிஃப் கூறும்போது, ‘மோர்டாஸா போட்டியிட பிரதமர் ஷேக் ஹசினா பச்சைக் கொடி காட்டிவிட்டார். மோர்டாஸாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். பங்களாதேஷின் மேற்கு பகுதியில் உள்ள அவரது சொந்த தொகுதியான நரேலில், மோர்டாஸா போட்டியிடுகிறார்’ என்றார். இதுபற்றி மோர்டாஸா வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். (ஷேக் ஹசீனாவுடன் மோர்டாசா) பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறும்போது, ‘கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவதற்கு தடை ஏதும் இல்லை. தேர்தலில் போ...

க்ருனால் பாண்டியாவை செல்ஃபி பேட்டி எடுத்த பும்ரா

Image
3வது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்தது தொடர்பாக க்ருனால் பாண்டியாவிடம் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பேட்டியெடுத்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் ஆர்சி ஷார்ட் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 28 (23) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஆர்சி ஷார்ட்டும் 33 (29) ரன்களில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் யாரும் எதிர்பாராத விதமாக க்ருனல் பாண்டியா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இறுதிவரை விளையாடிய கோலி அவுட் ஆகாமல் 41 பந்துகளில் 61 ரன்களை சேர்த்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டியின் ஆட்டந...

“கோலி மட்டும் போராடினால் போதாது” - கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் டிப்ஸ்

Image
டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது தொடர்பாக இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை வழங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் நடந்த முடிந்த டி20 தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்புப்படி டி20 தொடர் மழையின் காரணமாகவே சமனில் முடிந்ததாகவும், இல்லையென்றால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த 3-வது டி20 போட்டியில் இந்தியா விக்கெட்டை இழந்து தடுமாறிய போது, கேப்டன் கோலி மட்டும் இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இது அவரது தனிப் போராட்டமாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதவுள்ளது. இதுதொடர்பாக கருத்துகளை பகிர்ந்துள்ள கில்கிறிஸ்ட், “கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை போன்றே, இந்தத் தொடரில் விராட் கோலி 4 போட்டிகளில் அதிக ரன்களை குவிப்பார...

நீக்கப்பட்ட சர்ச்சை: மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் வாரியத்திடம் விளக்கம்!

Image
மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவரும் ஹர்மன்பிரீத் கவுரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் நேற்று விளக்கம் அளித்தனர். மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இதில், பி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் 56 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை இந்திய அணி வென்றது. இந்தப் போட்டி யில் மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. அதற்கு முன், 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்திருந் தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி, ஆன்டிகுவாவில் நடந்...

‘பிப். 7க்குள் திருவாரூரில் இடைத்தேர்தல்’ - தேர்தல் ஆணையம்

Image
திருவாரூரில் பிப்ரவரி 7ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த திருவாரூர் தொகுதி காலியானது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே. போஸ் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவர் மறைவை தொடர்ந்து அவர் பதவி வகித்த திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது இடைத்தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பருவமழையை சுட்டிக் காட்டி தமிழக அரசு கடிதம் எழுதியதை அடுத்து, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்படும் என்று மட்டும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடத்தக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்றது. அப்போது, திருவாரூரில் பிப்ரவரி 7ம் தேதிக்கு...

“ நீதிமன்ற விசாரணைக்கே பாஜக முக்கியத்துவம் அளிக்கும்” - ராமர் கோயில் குறித்துஅமித்ஷா

Image
தங்கள் சொந்த வழியில் சென்றிருந்தால், பாஜக எப்பொழுதோ ராமர் கோயிலை கட்டியிருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நேற்று அயோத்தியில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரண்டு லட்சம் பேர் அயோத்தியில் திரண்டதாக கூறப்படுகிறது. இதனால், அயோத்தியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதோடு, ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன் தினம் அயோத்திக்கு வருகை புரிந்தார். இரண்டு நாள் அயோத்தியில் இருந்த அவர் மடாதிபதிகளை சந்தித்து ராமர் கோயில் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த விவகாரத்தில் பாஜாக அரசியல் செய்வதாக கடுமையாக விமர்சித்தார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் அமித்ஷா, “அயோத்தி விவகாரத்தில் பாஜ...

மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு - வைகோ கேள்விக்கு ஸ்டாலின் சூசக பதில்

Image
திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தங்கள் கூட்டணியில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியது பற்றிய கேள்விக்கு வைகோ இதனை தெரிவித்தார். இதனிடையே, ராஜீவ் காந்‌தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏழு பேரையும் விடுதலை செய்யாமல் மனித நேயமின்றி காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 3ஆம் தேதி மதிமுக நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனிடையே, தோழமைகளாக இயங்கிவரும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகியவை கூட்டணியாக மாற வேண...

ஸ்டெர்லைட் விவகாரம் - முதலமைச்சரே காரணம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு

Image
ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அரசின் சீராய்வு மனு தள்ளுபடிக்கு முதல்வரே பொறுப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் விவ...

மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோர வேண்டும் - சரத்குமார்

Image
கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கூடுதல் நிவாரண நிதி கோர வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர். இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி செய்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர். முன்னதாக டெல்லி...

“தேர்தல் இன்று நடந்தாலும் பாஜக 30 எம்.பி தொகுதிகளை வெல்லும்” - பொன்.ராதாகிருஷ்ணன்நம்பிக்கை

Image
மக்களவை தேர்தல் இன்று நடைபெற்றாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி நிச்சயம் 30 தொகுதிகளை வெல்லும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அவர் அளித்துள்ள விரிவான பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியின் சில பகுதிகள்:- 1. தமிழகத்தில் பாஜகவின் வலிமை குறித்து உங்களது மதிப்பீடு? பாஜக, கூட்டணியில் வலிமையான சக்தியாக உருவெடுத்து தமிழகத்தில் பெருவாரியான இடங்களை பிடிக்கும். மக்களவை தேர்தல் இன்று நடந்தாலும் எங்களது கூட்டணி குறைந்தபட்சம் 30 தொகுதிகளை கைப்பற்றும். இருப்பினும், எங்கள் இலக்கு 40 தொகுதிகள். 2. கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டீர்களா? அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை இன்னும் தொடங்கவில்லை. ஆனால், நட்பு ரீதியாக பேச்சு நடத்தி வருகிறோம். 2014 மக்களவை தேர்தலில் அமைத்ததை விட வலிமையான கூட்டணியை அமைப்போம். 3. அதிமுக, அமமுக இரண்டு இணைய வேண்டுமென பாஜக உண்மையில் விரும்புகிறதா? இது அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளின் விருப்பம். இது அவர்களுக்குள் நடக்கும் ப...

வாகனங்களை மறித்து குதித்து ஆடும் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’... கேரள போலீசார்எச்சரிக்கை..!

Image
ஆபத்தை விளைவிக்கும் ‘நில்லு நில்லு சேலஞ்சை’ யாரும் மேற்கொள்ள வேண்டாம் என கேரளா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். முன்னர் ஒரு காலத்தில் ‘ஐஸ் பக்கெட்’ சேலஞ்ச் இணையத்தில் பிரபலமானது. அதனைத்தொடர்ந்து ஃபிட்னஸ் சேலஞ்சும் இணையத்தை கலக்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கிகி சேலஞ்ச் இணையத்தில் பிரபலமானது. கிகி சேலஞ்ச்படி, ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடிய படியே முன்னேற வேண்டும். இதனை ஆடிய பலரும் அதனை வீடியோவாக தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர். இந்த நடனத்தால் விபத்து ஏற்படும் என்பதால் யாரும் கிகி சேலஞ்ச்சில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதனையும் மீறி கிகி சேலஞ்ச் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் கேரளாவில் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ பிரபலமாகி வருகிறது. எனவே இந்த சேலஞ்சை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என கேரள போலீசார் தற்போது அறிவுறுத்தியுள்ளனர். அது என்ன ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ என கேட்கிறீர்களா..? கடந்த 2004-ஆம் ஆண்டு ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ என்ற மலையாள படம் வெளியானது. இப்படத்தில் ‘நில்...

ம.பி., மிசோரமில் தேர்தல் பரப்புரை நிறைவு.. நாளை மறுநாள் வாக்குப்பதிவு

Image
நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் மிசோரமில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வியாபம் ஊழல், பெட்ரோல்-டீசல் உயர்வு உள்ளிட்டவை மத்திய பிரதேசத்தில் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. இவைகளை மையப்படுத்தியே அரசியல் கட்சியினரின் பரப்புரை மேற்கொள்ளப்பட்டன. இதேபோல மிசோரம் மாநிலத்திலும் அனல் பறக்க தேர்தல் பரப்புரை நடைபெற்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அனல் பறக்க பரப்புரையில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், மிசோரமில் நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..!

Image
நாட்டின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ஓம் பிரகாஷ் ராவத்தின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் நாட்டின் அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் அவருடைய பெயரை தேர்வு செய்து மத்திய அரசு குடியரசுத் தலைவரிடம் அனுப்பியிருப்பதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுனில் அரோராவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அவர் வரும் டிசம்பர் 2-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்பார் என்றும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அவரே நடத்துவார் என்றும் சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பேற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது ஆகும்வரை அந்தப் பதவியை அவர் வகிக்கலாம். பொதுவாக அதிக பணி மூப்பு பெற்ற தேர்தல் ஆணையரையே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிப்பது மரபாக உள்ளது. தற்ப...

மகாராஷ்ட்ரா முதல்வர் ஹெலிகாப்டர் விபத்து: விமானியின் தவறே காரணம்!

Image
மகாராஷ்ட்ர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு விமானியின் தவறே காரணம் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் சென்ற ஹெலிகாப்டர், மும்பை லத்தூர் அருகே அவசரமாக தரையிறங்கும்போது மோதி நொறுங்கியது. கடந்த வருடம் நடந்த இந்த சம்பவத்தில் முதல்வரும் அவருடன் சென்ற அதிகாரிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிவதற்காக பாஜக ‘ஷிவார் சம்வாத் சபா’ என்ற பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. இதனையொட்டி அம்மாநில முதல்வர் பட்நவிஸ் வறட்சி பாதித்த மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லத்தூருக்கு சென்றுவிட்டு மும்பை திரும்பினார். அந்த ஹெலிகாப்டரில் முதல்வர் பட்நவிஸ், அதிகாரிகள் குழு மற்றும் இரண்டு விமான சிப்பந்திகள் உட்பட மொத்தம் 6 பேர் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த விமானி, அதை அவசரமாக தரையிறக்கினார். நிலங்கா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கும்போது மின்சார வயர்களில் சிக்கியபடி கீழே விழுந்து நொறுங்கியது. முதல்வரும் அதிகாரிகளும்...

சத்தீஸ்கர் துப்பாக்கி சண்டையில் 8 மாவோயிஸ்டுகள் கொலை

Image
சத்தீஸ்கர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் 8 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா தெரிவித்துள்ளார். மாவோயிஸ்டுகள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் சத்தீஸ்கர், மகாராஸ்டிரா மற்றும் தெலுங்கானா மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து என்கவுண்ட்டர் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் என்கவுண்ட்டரில் மாவோயிஸ்டுகள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய என்கவுண்ட்டரில் 35 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பெண்கள் உட்பட 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், சத்தீஸ்கர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் 8 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுக்மாவின் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மீனா கூறுகையில், “சத்தீஸ்கர் மற்று...

கஜாவினால் பாதித்த மக்களுக்கு கரம் கொடுத்த திருச்சி பள்ளி மாணவிகள்

Image
கஜா புயலால் பாதித்த மக்களுக்கு திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவியை தவிர தன்னார்வலர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள், பெற்றோர்கள் தங்களுக்கு அளிக்கக் கூடிய பணத்தில் உண்டியலில் சேமித்தவற்றையும், நிதி திரட்டியும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.60,000-க்கும் அதிகமான நிதியை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வழங்கியுள்ளனர். நமக்கு உணவிட்ட உழவர்களுக்கு நாம் உணவளிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி, மாணவிகள் இதனை செய்தனர். அந்நிதியிலிருந்து தண்ணீர் பாட்டில்கள், மெழுகுவர்த்திகள், அரிசி மூட்டைகள், போர்வைகள், பிஸ்கட், சோப்புகள்,...

பாதுகாப்பு பணியின்போது போலீசாருக்கு செல்போன் தடை

Image
காவலர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண், பெண், திருநங்கைகள் என ஏராளமான போலீசார் நாள்தோறும் காவல் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு பொங்கல், தீபாவளி உள்ளிட்ட நல்ல நாட்களில் கூட விடுமுறை கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணி நிமித்தமாக செல்போன் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. சட்டம்- ஒழுங்கு, விவிஐபி, கோயில், திருவிழாக்கள் பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை அந்தந்த காவல்நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணியின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு, காவல்களை பாதிக்கும் என கருதப்படுகறிது.

நீதிமன்ற வளாகத்தில் வெடித்த சொத்து பிரச்னை - மோதலில் 3 பேர் காயம்..!

Image
சொத்துப் பிரச்னை காரணமாக சேலம் நீதிமன்ற வளாகத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரை‌ அடுத்த சாமிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் அய்யனார், பரமேஸ்வரன் மற்றும் தங்கவேலு. இவர்களுக்கு சொந்தமா‌ன 13 சென்ட் நிலத்தை பிரித்துக்கொள்வதில் தங்கவேலு தரப்புக்கும் மற்ற இருவருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சனைக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காண சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மூன்று தரப்பை சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை 3-ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் தங்கவேல் அவரது மகன்கள் சுரேஷ், சர்கரவர்த்தி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் இருந்துள்ளனர். அப்போது அவர்களிடம் அய்யனார், பரமேஸ்வரன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டதில் தங்கவேல், சுரேஷ், சர்கரவர்த்தி ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வி...

எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..? தெரிந்து கொள்ள..!

Image
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கஜா’ புயல் கடந்த 15-ஆம் தேதி இரவு நாகை- வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர். இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி கடந்த 20-ஆம் தேதி செய்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்ற முதலமைச்சர் அதன்பின் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தின் மாப்பிள்ளையார்குளம் உள்ளிட்ட பகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் இருந்தனர். இதனையடுத்து தஞ்சைக்கு சென்ற முதலமைச்ச...

ஜெயலலிதாவுக்கு நினைவில்லம் ! தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவில்லம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் அவர் வாழ்ந்த வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என 2017 ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. அதற்கான அரசாணையை பிறப்பிக்கப்பட்டு வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான ஆய்வு பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் செய்து வந்தன. இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்படாவிட்டாலும், குற்றம் புரிந்துள்ளார் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என்றும், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளதால் அவரை குற்றவாளியாக கருத வேண்டுமெனவும், அப்படி ஒரு குற்றவாளிக்காக அரசு நிதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நினைவு இல்லை அமைக்ககூடாது எனவும் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்...

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்

Image
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஐராவதம் மகாதேவன், 2009ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஆதம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். 1930ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த மகாதேவன், திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும் இருந்த ஐராவதம் மகாதேவன், 1987 முதல் 1991 வரை தினமணி பத்திரிகையின் ஆசிரியாகவும் இருந்தார். முதலில் பழங்கால நாணயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த மகாதேவன், பின்னர் கல்வெட்டு எழுத்துக்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். சிந்துசமவெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழி குடும்பத்துக்கும் உள்ள உறவை சொன்னவர் மகாதேவன். தமிழ் பிராமி கல்வெட்டுகளில் ஆராய்ச்சி செய்த மகாதேவன் வித்யாசாகர் கல்வி அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் 2009 - 2010 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. “ரிக் வேத வழியில...

கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள்

Image
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி மைதானத்தில் இளைஞர்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்டா பகுதிகளை நோக்கி நிவாரணப்பொருட்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இதனிடையே இன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக ப...

கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்

Image
தானேவில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவன் வரதட்சனை கேட்டு வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா, தானே பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் அந்த பெண்ணை கணவர் கணேஷும் அவரது குடும்பத்தாரும் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பெண் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தன்னை கணவர் கணேஷும் அவரது குடும்பத்தாரும் வரதட்சனை கேட்டு நீண்ட நாளாக கொடுமை படுத்தி வருவதாக தெரிவித்திருந்தார். மேலும் தான் கருவுற்றிருந்ததாகவும், என்னை கணவர் வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் கணேஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் ஐபிசி 315 மற்றும் 498 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்து...

“பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பிக்கலாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

Image
தமிழகத்தில் பெட்ரோலின் தேவை 8 விழுக்காடும், டீசலின் தேவை 4 விழுக்காடும் ஓராண்டில் அதிகரித்திருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன மாநில செயல் இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்தன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 ஆயிரத்து 257 புதிய சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்தார். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆயி‌ரத்து 31 விற்பனை நிலையங்களும், புதுச்சேரியில் 36 விற்பனை நிலையங்களும் மொத்தம் ஆயிரத்து 257 விற்பனை நிலையங்கள் அமைக்க உள்ளதாக சித்தார்த்தன் கூறினார். இதற்காக மொத்தம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக கூறிய அவர், விற்பனை நிலையம் அமைக்க 65 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என்று அவர் தெரிவித்தார்.

‘இந்திய வரலாற்றில் நீங்கா வடு’ - மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு தினம் இன்று

Image
166 பேர் கொல்லப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் எப்போதும் காணாத வகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 3 நாட்கள் நீடித்தது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, 166 பேர் உயிரிழக்கக் காரணமான இந்த பயங்கரவாத தாக்குதல் நீங்கா வடுவாக இன்னும் இருக்கிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ தய்பா -வால் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு மும்பையில் தாக்குதல் நடத்த 10 பேர் அனுப்பப்பட்டனர். பாகிஸ்தானின் கடலோர நகரமான கராச்சியில் இருந்து அதிவேக படகுகளில் அவர்கள் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பைக்கு வந்தனர். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை நகருக்குள் நுழைந்தவுடனே அவர்கள் தாக்குதலைத் தொடங்கி விட்டனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் தாஜ் ஓட்டல் மற்றும் ஓபராய் டிரைடன்ட் ஓட்டல், யூதர்கள் கூடும் நரிமன் இல்லம் உள்பட 10 இடங்களில் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். ஏகே 47 ரக து...

‘தினமும் ரூ10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம்’ - வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம்கட்டுப்பாடு

Image
வேட்பாளர்கள் தினமும் ரூ10 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக செலவிட வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விடுத்துள்ளது. சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிஸோரம் மற்றும் தெலங்கானாவில் நடைபெறும் தேர்தல்களில் இருந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விடுத்து வருகிறது. அந்த வகையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்றவழக்குகள் குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் மூன்று முறையாவது கட்டாயம் விளம்பரப்படுத்தவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரப்புரைக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக செலவிடலாம் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு முன்பு, நாளொன்றுக்கு 20 ஆயிரம் வரை ரொக்கமாக செலவிட கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டை விதித்திருந்தது. ஆனால் வருமான வரிச்சட்டத்தில் கடந்த ஆண்டு மத்திய அரசு திருத்தம் செய்ததன் அடிப்படையில், தனது முந்தைய கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையமும் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ஒருநாளில் பரப்ப...