எந்த டிரைனும் இரவு 12 மணிக்கு புறப்படாது! ஏன் தெரியுமா?

நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவில் எந்த ரயிலும் புறப்படுவதில்லை. டிக்கெட் முன்பதிவில் இந்த ஒரு விதி தெரியாமல் பலர் தேதி தவறி சிக்கலில் சிக்குகின்றனர். விளக்கம் இதோ.

நள்ளிரவு 12 மணிக்கு ஏன் எந்த ரயிலும் புறப்படுவதில்லை? டிக்கெட் முன்பதிவில் கவனம் தேவைஇந்தியாவில் எந்த ஒரு ரயிலும் நள்ளிரவு 12 மணிக்கு (00:00) எந்த நிலையத்திலிருந்தும் புறப்படுவதில்லை. வழியில் இடைநிறுத்த நிலையங்களிலும் சரியாக 00:00 மணிக்கு வந்து புறப்படும்படி நேர அட்டவணை வைப்பதில்லை.

இது தற்செயல் அல்ல. ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து பின்பற்றும் 24 மணி நேர கடிகார முறையின் அடிப்படையில் உருவான நடைமுறை இது.

24 மணி நேர கணக்கில் ஒரு நாள் 00:00 முதல் அடுத்த 00:00 வரை. நள்ளிரவு 12 மணி என்பது 00:00. அடுத்த நிமிடம் 00:01 என்பது அடுத்த நாள். எனவே 00:00 என்பது முந்தைய நாளின் இறுதியா, புதிய நாளின் தொடக்கமா என்ற குழப்பம் எளிதில் ஏற்படும்.

இந்த குழப்பத்தைத் தவிர்க்கவே ரயில்வே நேர அட்டவணையில் சரியாக 00:00-ஐ தவிர்க்கிறது. பெரும்பாலும் 23:50, 23:55 அல்லது 00:01, 00:03 என்று நேரத்தை சற்று முன்னோக்கியோ பின்னோக்கியோ மாற்றுகின்றனர்.

24 மணி நேர முறையின் நன்மை தெளிவு. காலை 5 மணி என்பது 05:00. மாலை 5 மணி என்பது 17:00. இரவு 10 மணி என்பது 22:00. “காலை”, “மாலை” என்று தனியாக குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. எண் மட்டும் பார்த்தாலே நேரம் புரியும்.

இந்த விதி நடைமுறையில் எப்படி பாதிக்கிறது என்பதற்கு சென்னையிலேயே ஒரு தெளிவான உதாரணம் உள்ளது. தினமும் சென்னை எக்மோரிலிருந்து திருச்சி வரை இயங்கும் 12653 ராக்போர்ட் எக்ஸ்பிரஸ். இந்த வண்டி எக்மோரிலிருந்து இரவு 23:30 மணிக்கு (இரவு 11:30) புறப்படுகிறது.

அடுத்த நிறுத்தம் தாம்பரம். அங்கு வந்து சேரும் நேரம் 00:01, புறப்படும் நேரம் 00:03. அதாவது நள்ளிரவைக் கடந்த பிறகு தாம்பரம் வருகிறது. எனவே தாம்பரத்தில் இந்த வண்டி “அடுத்த நாள்” வண்டியாகவே கணக்கிடப்படுகிறது.

உதாரணம்: 4ஆம் தேதி இரவு 11:30க்கு எக்மோரிலிருந்து புறப்படும் வண்டிக்கு எக்மோரில் இருந்து திருச்சி வரை டிக்கெட் எடுத்தால் தேதி 4ஆம் தேதியாக இருக்க வேண்டும். ஆனால் தாம்பரத்திலிருந்து திருச்சி வரை ஏறப்போவோர் அதே வண்டிக்கு 5ஆம் தேதி என்றுதான் முன்பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் தாம்பரத்தில் வண்டி வரும் நேரம் 5ஆம் தேதி அதிகாலை 00:03.

4ஆம் தேதி என்று தாம்பரத்திலிருந்து முன்பதிவு செய்தால், அது முந்தைய நாள் வண்டியின் டிக்கெட்டாக மாறிவிடும். பயணி அன்று ஏறும்போது டிடி பரிசோதனையில் சிக்கல் ஏற்படலாம். “நேற்றைய டிக்கெட் இன்றைக்கு ஏறுகிறீர்கள்” என்ற நிலை வரக்கூடும்.

வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டும் ஓடும் வண்டியாக இருந்தால், முன்பதிவு செய்யும்போதே தவறு தெரியவரும். ஆனால் தினசரி ஓடும் வண்டியாக இருந்தால் அதே தேதிக்கு அடுத்த நாளும் வண்டி இருக்கும். அதனால் தவறான தேதியில் டிக்கெட் கிடைத்துவிடும். பயண நாளில் மட்டுமே பிரச்சினை தெரியும்.

எனவே எளிய விதி ஒன்று: நீங்கள் ஏறப்போகும் நிலையத்தில் வண்டி நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு வந்தால், அந்த நிலையத்துக்கான டிக்கெட்டை அடுத்த நாள் தேதியில் முன்பதிவு செய்யுங்கள். தொடக்க நிலையத்தில் நள்ளிரவுக்கு முன் புறப்பட்டாலும், உங்கள் ஏறும் நிலையம் நள்ளிரவைத் தாண்டியிருந்தால் தேதி மாறும்.

இந்த ஒரு விவரத்தை தெரிந்துகொண்டால் நள்ளிரவு கடக்கும் வண்டிகளில் தேதி குழப்பம், டிக்கெட் நிராகரிப்பு, வீண் பயணம் ஆகியவை தவிர்க்கலாம். ரயில்வே நேர அட்டவணையைப் பார்க்கும்போது 23:xx என்றால் அதே நாள், 00:xx என்றால் அடுத்த நாள் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

English summary : Indian Railways never schedules a train at exactly 00:00 to avoid date confusion in the 24-hour clock. After midnight, the calendar date changes. Example: Rockfort Express 12653 leaves Chennai Egmore at 23:30 but reaches Tambaram at 00:03 next day. Book the boarding station’s actual date, not the originating station’s date.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.