தவெக-வுடன் கூட்டணி! சசிகலா வியூகத்தின் பின்னணி இது தான்!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதிய கூட்டணி யூகங்கள் அரங்கேறி வருகின்றன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலருமான வி.கே. சசிகலா, தற்போது மிகுந்த கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம், அ.ம.மு.க. பொதுச்செயலர் டிடிவி தினகரன் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி அமைத்திருப்பது. இதனால், சசிகலா தனது செல்வாக்கு மிக்க தென் மாவட்டங்கள் (மதுரை, தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்) உள்ளிட்ட சுமார் 25 சட்டமன்றத் தொகுதிகளை குறி வைத்துள்ளார்.

இந்த தொகுதிகளில் அதிமுக - அமமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்பதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் வி.கே. திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழகம் (அ.தி.க.) கட்சியை, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) உடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகர் நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் இந்த கூட்டணி முடிவு எட்டப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த கூட்டணி மூலம் மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள 25 தொகுதிகளில் த.வெ.க. சார்பில் வேட்பாளர்கள் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஆனால், சசிகலாவின் நோக்கம் வெறும் வெற்றி மட்டுமல்ல. அதிமுக கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதன்மை இலக்கு என்பதால், இந்த கூட்டணியை நடிகர் விஜய் ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

த.வெ.க. தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சசிகலா தரப்பிலும் இது குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழக அரசியலில் சசிகலாவின் இந்த நகர்வு, தென் மாவட்டங்களில் அதிமுக - அமமுக கூட்டணிக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary : Sasikala is reportedly upset with TTV Dhinakaran’s alliance with Edappadi Palaniswami. She is focusing on 25 constituencies in Madurai, Theni, and surrounding areas. Discussions are underway for an alliance between Tamilaga Vettri Kazhagam and Anna Dravida Kazhagam to contest in these seats. No official confirmation has been made yet.